பங்களாதேஷ் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
நேற்று 13 இடம்பெற்ற இந்தப் போட்டியில் வென்றதன் மூலம், தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
பங்களாதேஷ் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தினாலும், நியூசிலாந்து போட்டி உட்பட அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 245 ஓட்டங்கள் சேர்த்தது. இதனையடுத்து 246 ஓட்டங்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
காயத்தில் இருந்து மீண்டு வந்த கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளார். வில்லியம்சன் அரைசதம் அடித்த நிலையில், ரன் ஓடிய போது களத்தடுப்பாளர் வீசிய பந்து அவரது கையில் பட்டமையால் கை விரலில் காயம் ஏற்பட்டது.
அதனால் அவர் பாதியில் வெளியேறினார். அடுத்து பிலிப்ஸ் – மிட்செல் இணைந்து 42.5 ஓவரில் இலக்கை எட்டி நியூசிலாந்து அணியை வெற்றி பெறச் செய்துள்ளனர்.
இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளை தொடர்ந்து, பாங்களாதேஷ் அணியையும் வீழ்த்தி மூன்று வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.