மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தங்களது நில மீட்புக் கோரி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அப்பகுதிகளி்லுள்ள பெரும்பான்மை இனத்தவர்களின் அடாவடிகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
நேற்றிரவு (13.10.2023) மயிலத்தமடு மாதவனை பகுதியில் மாடுகளை கட்டி வைக்கும் பட்டிக்குள் உள்நுழைந்த சிங்கள பேரினவாதிகள் அங்குள்ள பொருட்களை நாசம் செய்து எரித்து விட்டு சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பண்ணையாளர் ஒருவர் காணொளி ஒன்றினை பதிவிட்டுள்ளார். அக் காணொளி தற்போது முகநூலில் பகிரப்பட்டு வருகிறது.
அக் காணொளியில்; குறித்த பகுதிக்கு அருகில் உழவு வேலை செய்து கொண்டிருந்த சிங்களவர்கள் மது போதையில் தமது வாடிக்குள் உள்நுழைந்ததாகவும், தமது உடமைகளை களவாடியும் எரித்தும் சென்றதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், தம்மை தாக்கும் விதத்தில் வந்த அந்த கும்பலிடம் இருந்து தாம் தப்பித்து சென்றதாகவும் அவ்வாறு தப்பி ஓடாமல் விட்விட்டிருந்தால் தமது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு பல அச்சுறுத்தலின் மத்தியில் கால்நடைகளை மேய்க்கும் தமக்கு நியாயம் கிடைக்காதா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.