மயிலத்தமடு பகுதியில் இரண்டு கால்நடைகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மயிலத்தமடு – மாதவனை பகுதியில் அத்துமறிய பெரும்பான்மையின குடியேற்ற வாசிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் பண்ணையாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களது கால்நடைகளை சுட்டுக் கொல்லும் கோர சம்பவம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக இலங்கை ஜனாதிபதிக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்பு மாதவனை பகுதியில் அராஜகம் அதிகரித்துக் கொண்டிருப்பதாக பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள்,
“இரு சாராருக்கும் சுகமான ஒரு சூழலை ஏற்படுத்தி முரண்பாடுகளை தவிர்க்க ஜனாதிபதி பணிபுரை வழங்கியிருந்தாலும் அவருடைய பணிபுரைகள் அனைத்துமே காற்றில் பறக்கின்ற நிலைதான் இன்று காணப்படுகின்றது.
அத்து மீறிய பேரினவாத குடியேற்றவாசிகளின் அராஜக தனம் கால்நடைகளின் மீது இன்று அரங்கேறியுள்ளது.
குறித்த குடியேற்றவாசிகளின் செயல் அங்கு தங்கியிருக்கும் பண்ணையாளர்களுக்கும் உயிர் ஆபத்தை ஏற்படுத்தலாம். இதன் மூலமாக ஒரு இன முறுகள் ஏற்படும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக கரடியினாறு பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்றை செய்வதற்கு சென்றிருந்த போது முறைப்பாட்டினை ஏற்க மறுத்த கரடியினாறு பொலிஸ் பொறுப்பதிகாரி பொய்யான தகவல்களை வழங்குவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் குறித்த பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப் போகின்றோம் என கூறியதன் பின்னரே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.” என தெரிவித்துள்ளனர்.