மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த போது இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நட்டுவைத்த வெள்ளரச மரத்தை பராமரிக்கவும் – பாதுகாக்கவும் 54 இலட்சம் ரூபாயை (இலங்கை மதிப்பில்) ஆண்டுக்கு
செலவிட்டு வருகின்றனமை பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,மத்திய பிரதேசத்தின் – சாஞ்சியில் புத்த மத வளாகத்திலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ளது சல்மத்பூர். இங்குள்ள மலைக்குன்றில் 300 கோடி இந்திய ரூபாய் செலவில் புத்த பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது. 5 வருடங்களுக்கு முன்னர், அப்போது இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ அநுராதபுரத்திலிருந்து வெள்ளரசு மரக்கிளையை கொண்டுசென்று அந்த மலைக்குன்றில் நட்டார்.
இந்த வெள்ளரச மரக்கிளை புத்தருக்கு ஞானோதயம் கிடைத்த போதி மரத்திலிருந்து – 3ஆம் நூற்றாண்டில் –
சங்கமித்தையால் கொண்டு செல்லப்பட்டு, அநுராதபுரத்தில் நடப்பட்ட புனித வெள்ளரச மரத்தின் கிளையாகும். மகிந்த ராஜபக்ஸ நட்ட இந்த மரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால்
இதனை மாநில அரசு பராமரித்து வருகிறது. இந்த மரத்துக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக தனி தண்ணீர் தொட்டிகட்டப்பட்டது. மரத்தின் ஆரோக்கியத்தை கண்காணிக்க, மத்திய பிரதேச வேளான் துறையிலிருந்து தாவரவியல் நிபுணர் ஒருவர் வாரம் ஒருமுறை வந்து மரத்தை பார்வையிடுகிறார்.
மேலும், மரத்தை பாதுகாக்க ஊர்க்காவல் படையைச் சேர்ந்த நால்வர் கடந்த 2012ஆம் ஆண்டு பணிக்கு அமர்த்தப்பட்டனர். இவர்கள் இன்ன மும் இந்த மரத்தை பாதுகாத்து வருகின்றனர். இதற்காக மத்திய பிரதேச
அரசு ஆண்டுக்கு 12 இலட்சம் இந்திய ரூபாய் (நம் நாட்டு மதிப்பில் 54 இலட்சம் ரூபாய்) செலவு செய்கிறது என்று கூறப்படுகின்றது.