மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சமூக மட்ட அமைப்புகளான வணக்கஸ்தலங்கள், இளைஞர் கழகங்கள், மாதர் சங்கம், கிராமிய அபிவிருத்தி சங்கங்களில் செயற்படுபவர்களிலிருந்து குறிப்பிட்ட சிலரை தெரிவு செய்து விஷேட பயிற்சி நெறி ஒன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று (18.10.2023) நடைபெற்றது.
மத்தியஸ்த செயற்பாடுகளில் பிரதானமான ஒன்றாக காணப்படுகின்ற பிணக்குகளை சமூக மட்டங்களில் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக (Community Mediation) சன சமூக மத்தியஸ்தம் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 30 பங்குபற்றுனர்களுக்கு இப் பயிற்சி நெறி நடத்தப்பட்டது.
இதில் சமூகத்தில் காணப்படுகின்ற பிணக்குகளை எவ்வாறு பிரயோகரீதியாக தீர்வு செய்யலாம், அதற்கான தரவுகள் தகவல்களை எவ்வாறு பகுப்பாய்வு செய்யலாம், அதனூடாக எவ்வாறு சமூக மட்டத்தில் வினைத்திறனான தீர்மானத்தினை மேற்கொள்ளலாம் என கலந்துரையாடப்பட்டன.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் Butterfly Garden நிகழ்ச்சி முகாமையாளர் திரு.துரைசாமி நகுலேஸ்வரன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டதுடன், மண்முனை வடக்கு பிரதேச மத்தியஸ்த தவிசாளர் திரு.S.விஷ்ணுமூர்த்தி, மண்முனை வடக்கு பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருமதி.பிரின்ஸி மற்றும் நி.வினோதன் போன்றோர் கலந்து கொண்டனர்.