இலங்கை தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர் தொடர்பில் உள் போட்டிகள் தீவிரமடைந்திருக்கின்றன. தமிழரசு கட்சியின் மாநாட்டை தொடர்ந்தும் பிற்போடுவதற்கு இதுவும் ஒரு காரணமென்னும் அபிப்பிராயமுண்டு. இந்த நிலையில் கட்சியின் மாநாட்டின் பின்னரே யாருக்கு எந்தப் பதவியென்று தீர்மானிக்கப்படுமென்று கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்றார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மாவை சேனாதிராசா தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் இருப்பதற்கான தகுதியும் கேள்விக்கு உள்ளாகியது. தற்போதைய தமிழ்த் தேசிய அரசியலை பொறுத்தவரையில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுபவர்களே அரசியலை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். தேர்தலில் தோல்வியடைந்தால், அதன் பின்னர் அவர்கள் குரலற்றவர்களாகவே இருக்கின்றனர். பதவி இல்லாவிட்டாலும் கட்சியை கட்டுப்படுத்தும் வல்லமையுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எவருமில்லை.
இந்த நிலையில் மாவை சேனாதிராசாவின் தோல்வி அவர் தொடர்ந்தும் தலைவராக இருக்க முடியுமா என்னும் கேள்வியை எழுப்பியிருக்கின்றது. இந்தப் பின்னணியில்தான் தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர் தொடர்பான சர்ச்சைகள் மேலெழுந்திருக்கின்றன. சுமந்திரனே தகுதியுள்ளவரென்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
இன்னொரு சாரார் சிறீதரன் தகுதியுள்ளவரென்று கூறுகின்றனர். இந்த நிலையில் போட்டியில்லாமல் கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்கான வாய்ப்பும் மிகவும் குறைவாகவே இருப்பதாகத் தெரிகின்றது. சில வேளைகளில் சில சமரசங்களால் மாற்றங்கள் ஏற்படவும்கூடும். கட்சியின் புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு ஒன்று வருமிடத்து, சுமந்திரனும் சிறீதரனும் போட்டியிடுவதற்கான வாய்ப்புண்டு.தமிழரசு கட்சியின் தற்போதைய நிலைமை பெருமளவுக்கு சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராசாவின் தொடர்புகளுக்கு உட் பட்டவர்கள் வெளியேற்றப்படுவதான ஒரு தோற்றமே தெரிகின்றது. திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்டபாளர் தெரிவில் அதிருப்தி இருப்பதாகக்கூறி, அதனை விசாரிப்பதற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டன என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
திருகோணமலையில் இதுவரையில் சம்பந்தன் விரும்பியது மட்டுமே நடந்திருக்கின்றது. ஆனால், இனி அது நடக்கப்போவதில்லை, அதனை அனுமதிக்க முடியாதென்னும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலையில்தான் சம்பந்தன் இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணை கோருகின்றார். விசாரணை கோருவதிலிருந்தே, சம்பந்தனின் செல்வாக்கு மோசமான நிலையில் இருப்பது தெளிவாகின்றது. இதே போன்றுதான், யாழ்ப்பாணத்தில் மாவையின் நிலைமை. தமிழரசு கட்சியில் தொடர்ந்தும் இவ்வாறானவர்களோடு பயணிக்க முடியாதென்னும் நிலைப்பாடு வலுவடைந்து வருவதாகவே தெரிகின்றது.
தமிழசு கட்சி பாரம்பரிய கட்சியாக இருந்த போதிலும், ஒரு விபத்தாகவே கட்சி மீண்டும் தமிழ் மக்களுக்குள் முகம் காட்டியது. ஆனந்தசங்கரி சில விடயங்களில் இணக்கிச் சென்றிருந்தால், வீட்டுச் சின்னம் ஒருபோதுமே மீண்டும் அரசியலுக்குள் நுழைந்திருக்காது. மாவை சேனாதிராசாவும் அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்க மாட்டார். ஆனால், அன்றைய சூழலில் ஏற்பட்ட சில எதிர்பாராத விடயங்களால், அரசியல் நிலைமைகளும் எதிர்பாராதவிதமாக மாற்றமடைந்தது. இன்றைய நிலையில்தேர்தல் வெற்றியை தக்கவைக்கக் கூடியவர்கள் மட்டுமே கட்சியின் தலைமைத்துவத்தை கட்டுப்படுத்துவார்கள். இந்தப் பின்புலத்தில் நோக்கினால் மாவையால் அது நிச்சயம் இயலாது.