இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான உண்மையை கண்டறிய மேலும் ஒரு குழுவை நியமிப்பதானது கேலிக்குரிய செயலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற சர்வதேச மன்னிப்புச்சபையின் வருடாந்த அறிக்கை
சமர்ப்பிக்கும் நிகழ்வில் பங்கேற்றபோது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு
அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.இந்த நிலையில், அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் இதுவரை அமுல்படுத்தப்படாத நிலையில், புதிய ஆணைக்குழு ஒன்றினை அமைப்பதற்கும், அந்த விடயங்கள் தொடர்பில் கற்றாராய்வதற்கும் அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ஷ மற்றும் அலி சப்ரி ஆகியோர் முயற்சிக்கின்றனர். அமைச்சர்களின் இந்த செயலை கேலிக்குரிய செயலாகவே அவதானிக்க முடியும் என முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.