மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகள் மீது துப்பாக்கிசூடுகள் நடாத்தப்பட்டுவரும் நிலை காணப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய தினமும் (18.10.2023) மயிலத்தடு பகுதியில் கால்நடை பண்ணையாளரின் மாடு ஒன்று மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேய்ச்சல் தரை பண்ணையாளர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு அங்கு சட்ட விரோத பயிர்ச்செய்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று தினங்களுக்குள் மூன்று கால்நடைகள் மீது துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பண்ணையாளர்களின் குடியிருப்புகளும் அண்மையில் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களினால் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக கால்நடைகள் மீதும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அப்பகுதியில் புத்தர் சிலையும் வைக்கப்பட்டு சட்ட விரோத குடியேற்ற செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் சட்ட விரோத காணி அபகரிப்பாளர்களை வெளியேற்றும் வரையில் போராட்டத்தினை கைவிடப்போவதில்லையென கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.