முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் மயிலத்தமடு பண்ணையாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கோரியும் இன்றையதினம் (20.10.2023) வடகிழக்கு இணைந்த ஹர்த்தால், கடையடைப்பு போராட்டத்துக்கு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்திருந்தன.
இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் கட்சிகள் வர்த்தக சங்கம்,அரச ஊழியர்கள், பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய ஹர்த்தால் நிலவரம் பின்வருமாறு காணப்படுகின்றது.
மட்டக்களப்பில் வர்த்தக சங்கங்கள் இதற்கு தமது பூரண ஆதரவினை வழங்கியிருக்கின்றன. அந்தவகையில் மட்டு நகர்புறத்திலுள்ள பெரும்பான்மையான கடைகள் கதவடைப்பு செய்திருந்தாலும் சில உணவகங்கள் திறந்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றன.
அரச உத்தியோகத்தர்களின் அலுவலக வருகைகள் வழமைபோல் காணப்பட்டாலும் அலுவலகங்களிற்கு சேவையினை பெற வருகை தரும் பொதுமக்களின் வருகையானது குறைவாகவே காணப்படுகின்றது.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் தங்களது சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோதிலும் இவை வழமையை விட சற்று குறைவாகவே காணப்படுகின்றன.
முச்சக்கர வண்டி சாரதிகளும் தங்களது ஆதரவினை வழங்கியுள்ள நிலையில் வீதிகளில் குறைந்தளவு எண்ணிக்கையிலான முச்சக்கர வண்டிகளையே காண கூடியதாகவுள்ளன . இவை குறிப்பாக அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் போக்குவரத்தில் ஈடுபடுகின்றமையை காணக்கூடியதாகவுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் சேவையினை பெற வருகை தரும் பொதுமக்களின் அளவு குறைவாகவே காணப்படுகின்றது.
பாடசாலைகளில் இரண்டாம் தவணை பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளில் சிலவற்றில் இன்றைய நாளுக்கான பரீட்சைகள் எதிர்வரும் புதன்கிழமை ஒத்திவைக்க கல்வி வலயங்கள் தீர்மானித்து மாணவர்களை வீடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டிருந்தாலும் மட்டக்களப்பு கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில் தற்சமயம் பரீட்சைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறன. மேலும் மட்டக்களப்பு மாவட்ட வேறு கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில் இன்றைய நாளில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நவராத்திரி பூஜைக்குரிய ஆயத்த வேலைகள் நடைபெறுகின்றன.
அதேசமயம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் ஹர்த்தாலுக்கு ஆதரவாக கடையடைப்புகள் இடம்பெற்றுள்ளன. அந்த பிரதேசங்களில் போக்குவரத்து நடவக்கைகளும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் காணப்படுகின்றன. ஆனால் கல்முனை பிரதான சந்தையிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் வழமைபோல் வியாபார நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் கல்வி நடவடிக்கைகள் வழமையாக நடைபெறுகின்ற போதிலும் பொதுப்போக்குவரத்துகள் குறைந்தளவில் காணப்படுவதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.