மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்கள் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து மீண்டுமொருமுறை சாதனையை நிலைநாட்டுவதற்காக நேற்றைய தினம் (21) சனிக்கிழமை தலைமன்னாரிலிருந்து,தனுஷுகோடிக்கு படகு மூலம் தங்கல் பயணத்தை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு புனித மிக்கேல் கல்லூரியின் சிரேஸ்ட சாரண மாணவர்கள் மூவர் இணைந்து இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து பாக்கு நீரிணையை குறுகிய நேரத்திற்குள் கடந்து தலைமன்னாரை வந்தடைந்து சாதனையினை நிலைநாட்டவுள்ளனர்.
புளோரிங்டன் டயன்ஸ்ரித், புளோரிங்டன் டயன் பிறிடோ மற்றும் இருதயநாதன் கெல்வின் கிசோ ஆகியோர் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே குறித்த சாதனையை நிலைநாட்டவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (22) இரவு 11 மணிக்கு இந்த சாதனையை படைக்க குறித்த மூன்று மாணவர்களும் தயாராகி வருவதுடன்,பெற்றோர்,உறவினர்கள், பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் என்போர் தலைமன்னார் வரை சென்று குறித்த மாணவர்களை உற்சாகப்படுத்தியதோடு, மூன்று சமயத்தலைவர்களாலும் விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்று, பாடசாலை கீதமும் பாடப்பட்டது.
அதேவேளை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து ஏற்கனவே சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.