அமைச்சரவையை நான்கு தடவை கோட்டாபய ராஜபக்ச மாற்றியமைத்த வேளை அமைதியாக இருந்த நாமல் ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரே ஒரு தடவை அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வந்த போது சண்டியன் போல பேசுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அமைச்சரவையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த வேளை பூனைகள் போல நடந்துகொண்ட நாமல் ராஜபக்சவும் சாகரகாரியவசமும் தற்போது நாய்கள் போல குரைக்கின்றனர்.
அமைச்சரவை மாற்றங்களை ஜனாதிபதி உரிய முறையில் மேற்கொண்டுள்ளார். நாமலும் சாகரவும் அதனை எதிர்த்தால் அவர்கள் தங்களுக்கு மூளைகோளாறா என பரிசோதிக்கவேண்டும்.
ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக பொய் தெரிவிப்பதை விட சாகர காரியவசம் பதவியில் இருந்து விலகி இவ்வாறான கருத்துக்களை வெளியிடவேண்டும். அவருக்கு இதற்கான துணிச்சல் உள்ளதா என நான் சந்தேகிக்கின்றேன்.
அமைச்சரவையை கோட்டபாய ராஜபக்ச நான்கு தடவை மாற்றியவேளை நாமல் அமைதியாக இருந்தார். ஆனால் ரணில் விக்ரமசிங்க ஒருமுறை அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டவுடன் நாமல் தனது வழமையான சண்டியன் பாணியில் பேசுகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.