அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெற்கில் இருக்கும் தமிழர்களை துண்டு துண்டாக வெட்டப் போவதாக அச்சுறுத்தியமை, தண்டிக்கப்படக் கூடிய பாரதூரமான குற்றமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக பொலிஸார் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து பொலிஸ் மா அதிபருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில்,
மங்களராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடந்த சில நாட்களாக விடுத்துவரும் அறிக்கைகள் குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். இந்த அறிக்கைகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
எங்கள் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்தை தாக்கி தேரர் தொடர்ச்சியாக அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் நாட்டின் தென்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களை வெளிப்படையாக அச்சுறுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர்களை துண்டு துண்டாக வெட்டப்போவதாக தெரிவித்துள்ளார்.
இது ஐசிசிபிஆர்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய அப்பட்டமான குற்றமாகும். பொலிஸார் ஏன் பௌத்த மதகுருவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.