புதிய கடற்றொழில் சட்டம் நிறைவேறுமானால் இலங்கையின் வளமான கடற்பரப்புக்கள் வெளிநாட்டு சக்திகளிடம் சென்றடைந்து விடும் என இலங்கை கடற்றொழில் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் தினேஷ் சுரஞ்சன் பெனாண்டோ தெரிவித்தார்.
நேற்று (28.10.203) சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம் பெற்ற வடமாகாண கடற்றொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் சுதந்திரமாக கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற கடற்றொழில் சமூகத்தை கடற்றொழிலில் இருந்து அப்புறப்படுத்தி வெளிநாட்டு பல்தேசிக் கம்பெனிகளுக்கு எமது கடல் வளத்தை தாரை வார்க்கும் நோக்கில் புதிய சட்டத் திருத்தம் இடம்பெற்றுள்ளது.
புதிய கடற்றொழில் சட்டத்தை கடற்றொழில் சங்கங்களோ, சமாசங்களோ கோராத நிலையில் யாரின் தேவைக்காக அல்லது யாரின் நோக்கத்தை நிறைவு செய்வதற்காக புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வர உள்ளார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.
நாம் 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கடற்றொழில் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து இழுவைமடித் தொழிலை முற்றாக தடை செய்யுமாறு பல தடவைகள் அரசாங்கத்திற்கு கோரிக்கை முன் வைத்துள்ளோம், இதுவரை நிறைவேறவில்லை.
ஆனால் தற்போது கடற்றொழில் சமூகம் கோராத புதிய சட்ட திருத்தத்தின் மூலம் வெளிநாட்டு படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் உள்நுழைய சட்ட நீதியான அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன காலத்தில் இலங்கை கடற்பரப்புக்குள் சீன கப்பல்கள் கடற்றொழிலில் ஈடுபட்டன.
இலங்கையில் சுமார் ஐந்து இலட்சம் கிலோமீட்டர் வளமான கடற் பிரதேசத்தை வெளிநாட்டு சக்திகளுக்கு தாரை வார்க்கும் நோக்கில் புதிய சட்ட திருத்தத்தில் கடற்றொழில் அமைச்சருக்கும் பணிப்பாளருக்கும் அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று இடங்களையும் இயற்கை வளங்களையும் அந்நிய நாடுகளுக்கு விற்று விட்ட நிலையில் எஞ்சிய கடல் வளத்தையும் வெளிநாடுகளுக்கு விற்கப் போகிறார்கள்.
இலங்கையில் பிறந்த கடற்றொழில் சமூகம் தமது தொழில் நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு எவ்வித அருகதை அற்றவர்களாக கட்டிப் போடுவதற்கு புதிய சட்டத்தின் ஊடாக வழி வகுக்கப்படுகிறது.
ஆகவே ஆபத்தான கடற்றொழில் சட்டத்தை எதிர்ப்பதற்கு இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த கடற்றொழில் சமூகங்களும் தயாராக வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.