இனங்களுக்கிடையே இன முறுகலை ஏற்படுத்தும் விதமாக வீதியில் நின்று வன்முறையாக செயற்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நேற்று (27.10.2023) குறித்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.
முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“சம்பவதினமான கடந்த புதன்கிழமை(25.10.2023) மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரைக்கு அருகாமையில் வீதியை மறித்து தென் இலங்கையில் உள்ள தமிழர்கள் ஒவ்வொருவரினதும் தலைலைய வெட்டி அனுப்பபோவதாக அச்சுறுத்தல் விடுத்து தமிழர்களுக்கு எதிராக கடும் வார்த்தைகளை பிரயோகித்து சத்தமிட்டார்.
இந்நிலையில், தமிழ் – சிங்கள மக்களிடையே பாரிய ஒரு இன முரண்பாட்டை தோற்றிவிக்கும் முகமாக கருத்துக்களை தெரிவித்துள்ளமை ஊடகங்கள் ஊடாக வெளிவந்துள்ளதுடன், தேரர் இவ்வாறான இன முரன்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்து, தமிழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.
அத்துடன் சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தமிழ் மக்களின் பூர்வீக இடங்களில் அத்துமீறி புத்தர் சிலையை வைப்பது தமிழர்களை அச்சுறுத்துவது போன்ற பல்வேறு விதமாக இன முரன்பாட்டை ஏற்படுத்த செயற்பட்டுவருகின்றார்.
எனவே இவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்து இவரை கைது செய்து இவரைப் போன்ற இனவாத முரன்பாட்டை தோற்றுவிப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமைய நீதியையும் சட்டத்தையும் நிலைநாட்டி தரவேண்டும்” என பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.