மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரச்சினைகளை தீர்க்க இதுவரை சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த சங்கத்தின் பொதுச் செயலர் எஸ்.பீ.மெதிவத்த குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதைய அமைச்சர் தலையிட வேண்டும் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 2022ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 9 மருந்து வகைகளில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாக கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 156 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் கொள்வனவு செய்யப்பட்ட சில மருந்து வகைகளின் தரம், காலாவதி திகதி உள்ளிட்ட சில விடயங்களில் சர்ச்சைகள் உள்ளதாக அந்த கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.