சம்பந்தனை பதவி விலக வேண்டுமென்று கூறப்பட்ட கருத்து தமிழ் அரசியல் சூழலில் வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்திருக்கின்றது. தமிழரசுக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படையாக தெரிவித்திருந்த விடயம் தொடர்பில், ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளிவருகின்றன.
குறிப்பாக திருகோணமலையில் சம்பந்தனுக்கு ஆதரவானவர்கள் சுமந்திரனை விமர்சித்து வருகின்றனர். திருகோணமலை விடயத்தில் கருத்துக் கூறுவதற்கு – அவர் யாரென்றும் கேட்குமளவிற்கு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்னொருபுறம், இயலாவிட்டால் புதியவர்களிடம் பதவிகளை ஒப்படைக்கவேண்டும் -அதுவே சரியானதென்றும் கருத்துக்கள் வெளிவருகின்றன. சுமந்திரன் பற்ற வைத்த நெருப்பு ஒரு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதாவது, இலங்கை தமிழரசுக கட்சி மட்டுமல்ல, தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்துவதாக கூறிக்கொள்ளும் கட்சிகள் அனைத்திலும் காலத்திற்கு ஏற்றவாறும், தூரநோக்குடன் அரசியலை கையாளக்கூடிய புதிய தலைமுறையொன்றை உள்வாங்குவது அவசியம் – இதில் குறிப்பாக ஒரு பாரம்பரிய கட்சியென்னும் வகையில் – இலங்கை தமிழரசுக் கட்சியில் அவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவது அவசியம்.
அரசியல் தலைமைத்துவம் இரண்டு வகையானது. ஒன்று புலமைத்துவ நிலையிலான தலைமைத்துவம். இரண்டு, செயல்பாட்டு தளத்திலான தலைமைத்துவம். இந்த இரண்டும் ஒருங்குசேர இருந்தால் சிறப்பானது – ஆனால், இரண்டையும் சமநேரத்தில் கையாளக் கூடியவர்களோ அரிதானது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு பின்னர் அவ்வாறான ஒருவரை இதுவரையில் தமிழ் சமூகம் கண்டிருக்கின்றதா என்னும் கேள்வியுண்டு. அப்படியான தகுதியுள்ளவர்கள் தலைமை தாங்கும் போது, குறித்த இனம் பெரும் நன்மைகளை பெறும். அவ்வாறில்லாதபோது, இரண்டையும் ஒரிடத்தில் திரட்டக் கூடியவர்களை கட்சிகள் கொண்டிருக்கவேண்டும். அந்த வகையில் வயதில் கூடியவர்கள், தங்களின் அறிவாலும் அனுபவத்தாலும் கட்சிக்கும், சமூகத்திற்கும் பலம் சேர்க்க முடியும். செயல்பாட்டு நிலையில் ஆளுமையுள்ளவர்கள் அந்தத் தளத்தில் இயங்க முடியும்.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால், தமிழரசு கட்சியில் முதிய நிலையிலிருக்கும் அரசியல்வாதிகள் தங்களின் அனுபவத்தை வழங்கும் வகையில் செயல்படுவதில் தவறில்லை. ஆனால் அதற்கும் இயலாதவர்கள் தொடர்ந்தும் பதவிகளை அலங்கரித்துக்கொண்டிருப்பதில் பயனில்லை. இதேபோன்றுதான் ஏனைய கட்சிகளும். ஒவ்வொரு கட்சிகளும் புதிய அரசியல் சவால்களுக்கு ஏற்ப, தங்களின் கட்சிகளின் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும்.
கடந்த பதின்நான்கு வருடகால அரசியல் நகர்வுகள், தமிழ் தேசிய கட்சிகளதும், அதன் தலைவர்களதும் ஆற்றலை தெளிவாக இனம் காட்டியுள்ளது. இதற்குப் பின்னரும் தங்களை சகல-கலா வல்லவர்களென்று எவரேனும் கூறினால், அவர்களால் எவ்வித பயனுமில்லை. இந்த நிலையில் தொடர்ந்தும் வெற்று சுலோகங்களில் நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்காமல், புதிய தலைமுறை ஆற்றலாளர்களை எவ்வாறு கட்சிக்குள் உள்வாங்கலாம், என்னுமடிப்படையில்சிந்திக்க முன்வர வேண்டும். தொடர்ந்தும் இயங்க முடியாதவர்கள், புதியவர்களுக்கு இடமளிக்கும் வகையில் கட்சியின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.