பாரதூரமான குற்றச்செயல்களின்போது குற்றவாளிகளாகக் காணப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களை அந்த பதவியிலிருந்து நீக்கும் அதிகாரங்களைக் கொண்டதாக உத்தேச சுயாதீன பாராளுமன்ற தர நிர்ணய அதிகார சபை அமையுமென நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அதிகாரங்களில் அரைவாசியைக் கொண்டதாக (semi judicial power) ஸ்தாபிக்கப்படவுள்ள இந்த அதிகார சபை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியொருவரின் தலைமையில் நியமிக்கப்படவுள்ளதாகவும் அதற்காக எந்தவொரு அரசியல்வாதியும் நியமிக்கப்படமாட்டாரென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் நம்பிக்கையை ஏற்படுத்தல், பொறுப்பு மற்றும் தொழில் கௌரவத்தை உறுதிப்படுத்துதலுக்கான ஒழுக்கநெறி கோவையொன்று உருவாக்கப்படவேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை முன்வைத்திருந்தார்.
மேற்படி அதிகாரசபையை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் தொடர்பில் சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களது கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸ ஆகியோர் இணைந்து சமர்ப்பித்திருந்த யோசனைக்கு கடந்த 24 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது ஊழல், மோசடிகள் மற்றும் திருட்டுக்கள் தொடர்பில் குற்றவாளிகளாகக் காணப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு சட்டமொன்று கிடையாதென்றும் அவ்வாறான தருணங்களில் இரண்டு வார காலம் அல்லது மூன்று வார காலம் பாராளுமன்ற அமர்வு தடை மட்டுமே விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்த அதிகார சபையை ஸ்தாபிப்பதற்காக அரசியல் கட்சிகளின் தலைவர்களது கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், இந்த புதிய சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதித் தேவை தொடர்பில் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அறிக்கையொன்று தயாரிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.அந்த சந்தர்ப்பத்தில் ஏதாவது அதில் பொருத்தமின்மை காணப்படின் அதன்போது சம்பந்தப்பட்டபாராளுமன்ற உறுப்பினரின் தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சட்ட மாஅதிபர்திணைக்களத்தின் சட்ட மூலப் பிரிவின் மூலம் புதிய அதிகார சபையை உருவாக்குவதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. புதிய அதிகார சபையை ஸ்தாபிப்பது தொடர்பில் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த அதிகார சபையின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வசதிகளை தீர்மானிப்பது மற்றும் மீளாய்வுசெய்வது அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்கநெறிக் கோவையை நடைமுறைப்படுத்துவது மற்றும் கண்காணிப்பது ஆகிய நடவடிக்கைகள் இடம்பெறும். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறி கோவையை நடைமுறைப்படுத்தல் மற்றும் கண்காணித்தல் பாராளுமன்ற அனுமதியின் கீழ் ஒழுக்க தர்மம் மற்றும் சிறப்புரிமை தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழு மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பின்னர் பாராளுமன்றஉறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கான பொறுப்பும் அந்த அதிகார சபைக்கு வழங்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.