இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்பு களமிறங்கியுள்ளது.
ஹமாஸ் போராளிகள் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இஸ்ரேலும் பதிலடியாக தாக்குதலை தொடர்ந்தது. 3 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இப்போரில் இஸ்ரேல் படையினர் காஸா எல்லைக்குள் தரை வழியாக நுழைந்துள்ளனர்.
வான் வழி, கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து தரை வழியாக நடத்தப்படும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் – ஹமாஸ் போரின் 2ம் கட்டம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் காஸாவில் இதுவரை 8,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 3,320 பேர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்பு களமிறங்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இஸ்ரேலுக்கு எதிராக லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பினர் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த ஏவுகணை தாக்குதலுக்கு யேமனின் ஹவுதி அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இவர்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரியா தனது X தளத்தில், பாலஸ்தீன சகோதர்களுக்கு ஆதரவான எங்கள் தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ளார்.