கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்புகளை நிறுத்தாவிட்டால் வடகிழக்கில் மக்களை ஒன்றுதிரட்டி அரசாங்கத்திற்கு ஒரு பதிலைசொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லையென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீதரன் தெரிவித்தார்.
மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதிகளில் காணப்படும் மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பாளர்களுக்கான கால்நடை மேய்ச்சல் தரைக் காணிகள் அம்பாறை மற்றும் பொலநறுவை பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள சிங்கள விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அதேவேளை தமிழருக்குரிய கால்நடைகள் சுட்டுக்கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக மட்டக்களப்பை சேர்ந்த கால் நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசில் அங்கம் வகிக்கின்ற மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மௌனமாக இருப்பதுடன் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும் இவ்விடயம் தொடர்பாக முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில் தமக்கான நீதி வழங்கக்கோரி கடந்த 49 நாட்களாக மட்டக்களப்பு கால்நடைப்பண்ணையாளர்களால் தொடர்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிதரன்,முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன் மற்றும் கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர்,உறுப்பினர் உட்பட பலர் இன்றைய கால்நடை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சிறிதரன் எம்.பி., மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரியமாக பரம்பரையாக கால்நடைகளை வளர்த்த காணிகளை வலுக்கட்டாயமாக பறித்து எடுக்கும் முயற்சிகளை முன்னெடுத்துவரும் நிலையில் அதற்கு எதிராக 49நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராடிவருகின்றனர்.
தமிழ் மக்களின் அடிப்படையான அவர்களின் நிலத்தினை பறித்தல் என்பது அவர்களை வாழவிடாமல் அகற்றுவதற்கான முயற்சியை முன்னெடுத்து வருகின்றது. அந்த முன்னெடுப்புகளில் ஒன்றுதான் மயிலத்தமடு,மாதவனை பகுதி செயற்பாடாகும். இது இன்று நேற்று அல்ல டட்லி சேனநாயக்க காலத்தில் நினைத்த விடயத்தினை ஜே.ஆர் காலத்தில் நடைமுறைப்படுத்த முயற்சித்தார்கள். தற்போது ஜனநாயகம் பேசிக்கொண்டு நிலங்களை பறித்துக்கொண்டு சிங்கள மயப்படுத்தி கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல் செய்வதில் இந்த அரசாங்கம் பாரிய முனைப்பினை காட்டிவருகின்றது.
அம்பாறையில் தமிழ் மக்களின் இருப்புகளையும் பிரதிநிதித்துவத்தையும் இழந்துவரும் நேரத்தில் திருகோணமலையிலும் அதேநிலைமையினை எதிர்கொண்டுள்ள காலச்சூழலில் தொடர்ந்தும் நாங்கள் பாதிக்கப்படுகின்றோம்,வஞ்சிக்கப்படுகின்றோம். அதற்கு எதிராகவே மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு ஆதரவு வழங்குவது என்பது எங்களது கடமையாகும். இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி அப்பகுதியில் உள்ள சட்ட விரோத குடியேற்றகாரர்களை அகற்றுமாறு கூறிய பின்னரும் அப்பகுதியில் புத்தர்சிலையினை வைத்தார்கள்,சட்ட விரோதமாக அம்பிட்டிய தலைமையிலான அராஜககுழு தொடர்ந்து செயற்பட்டுவருகின்றது.முன்னாள் ஆளுனர் அனுராதா ஜகம்பத் தலைமையில் நிலப்பறிப்பு செயற்பாடுகள் தொடர்ச்சியாக இந்த விடயம் தொடர்பில் சட்ட ரீதியான நடைமுறைகள் நடைமுறைப்படுத்தாவிட்டால் நாங்கள் வடகிழக்கில் மாபெரும் மக்கள் அலையினை உருவாக்கி அரசாங்கத்திற்கு ஒரு பதிலை சொல்ல வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை. வாய்பேசாத மாடுகள் வெடி வைத்து கொல்லப்படுகின்றன. வாய்வெடிகள் ஊடாக மாடுகள் கொல்லப்படுகின்றன. இதுதான் புத்த தர்மமா என்பதுபோல சிங்கள பௌத்தர்கள் மாடுகளை கொலை செய்துவருவதுதான் அவர்களின் மதக்கொள்கைக்கு எவ்வாறு சரியானது என கேட்கத்தோன்றுகின்றது.