டீப் ஃபேக் (Deep Fake) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரபலமானவர்கள் மீது அவர்களது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் குறிவைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் நடிகைகளாகவே உள்ளனர். சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மீது இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
டீப்ஃபேக் என்றால் என்ன?
டீப்ஃபேக் என்பவை செயற்கையாக ஏற்படுத்தப்படும், வீடியோ, ஆடியோ, படங்கள் மற்றும் பதிவுகளை குறிக்கும். ஆனால் வழக்கமான போலி பதிவுகளுடன் Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இதில் சேர்க்கப்படுவதால், இப்படி உருவாக்கப்படும் போலியான வீடியோ புகைப்படங்கள் ஒரிஜினலுடன் மிகவும் ஒத்துப் போய் இருக்கும்.
இப்படி டீப்ஃபேக் வீடியோக்கள் பரவும்போது அது போலியானது என்பதை கண்டுபிடிக்க அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்தவொரு நபருடைய ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை உருவாக்க முடியும் என்பதால் இது மிகவும் ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
டீப் ஃபேக் என்ற சொல் Deep Learning மற்றும் Fake என்ற 2 சொற்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஒருவர் உடலுடன் இன்னொருவரின் முகத்தை பொருத்தவோ, அல்லது ஒருவர் முகத்துடன் இன்னொருவரின் உடலை பொருத்தவோ இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதில் செய்து விட முடியும்.
டீப் வீடியோவின் ஆபத்து
இப்படி டீப் ஃபேக் வீடியோக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தால் அவற்றால் பெரிய அளவுக்கு ஆபத்து ஏற்படாது என்றும், அதுவே நூற்றுக் கணக்கில் இணையத்தில் பரவ விடப்பட்டிருந்தால் ஒரு பிரபலத்திற்கு அது அதிக பிரச்னைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து வெளிவந்த டீப் ஃபேக் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் பகிர்ந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இதன்பின்னர்தான் இந்தியாவில் டீப்ஃபேக் குறித்து அதிகம் பேசப்படுகிறது.
பிரபல யூடியூபர் ஜிம்மி டொனால்ட்சனை குறிவைத்து டீப்ஃபேக் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. டிக்டாக் விளம்பரத்தில் நடிக்கும் டொனால்ட்டுசன் 2 டாலருக்கு ஐபோன்கள் விற்கப்படுவதாக கூறும் வகையில் வெளிவந்த இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.
உண்மையிலேயே டீப்ஃபேக் தொழில்நுட்பம் முற்றிலும் பொழுதுபோக்கு விஷயங்களுக்காக மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றை அற விதிகளுக்கு (Ethical) உட்பட்டு மட்டுமே பயனர்கள் பயன்படுத்த வேண்டும்.
ஒரு வீடியோ டீப்ஃபேக் என்பதை கண்டுபிடிப்பதற்கு சில வழிகள் உள்ளன.
வீடியோவில் உள்ள முக பாவனைகள் அடிக்கடி மாறுதல் அடையக் கூடும். குறிப்பாக கண்கள், உதடு, லிப் சிங்க் எனப்படும் முக பாவனைக்கும் குரலுக்குமான தொடர்புகள் இவற்றை நன்றாக கவனித்தால் நாம் வித்தியாசத்தை பார்க்க முடியும்.
Background
வீடியோவுக்கு பின்னால் உள்ள BackGround அடிக்கடி மாறினால், அல்லது அதில் நிலையான தன்மை இல்லாமல் இருந்தால் அது டீப் ஃபேக் வீடியோவாக இருக்கலாம்.
வெளிச்சம்
வெளிச்சமும், நிழலும் டீப் ஃபேக் வீடியோக்களை கண்டுபிடிக்க உதவும். சாதாரண வீடியோக்களை விட டீப் ஃபேக்குகளில் வெளிச்சமும், நிழலும் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது நீக்கப்பட்டிருக்கலாம்.
வீடியோவின் நோக்கம்
வீடியோ எந்த மாதிரியான நோக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது என்பதன் அடிப்படையில் அது உண்மைதானா என்பதை கண்டுபிடிக்கலாம்.
சர்ச் டூல்கள்
சர்ச் டூல்ஸ்களை பயன்படுத்தி டீப்ஃபேக் வீடியோக்களை பிரிதது அறிய முடியும். இதில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வீடியோ, ஆடியோ, புகைப்படங்கள் இருந்தால் சர்ச் செய்யும்போது தெரிந்து விடும்.