இரா.சம்பந்தன் தீபாவளி தினச் செய்தியை வெளியிட்டிருக்கின்றார் – கூடவே அரசியல் தீர்வுக்கான ஜனாதிபதி ரணிலின் செயல்பாடுகள் நம்பிக்கைக்குரியதாக இல்லையென்றும் கூறியிருகின்றார். சம்பந்தன் கடந்த காலத்தில் – அவ்வப்போது தீபாவளிக்கு முன்னர் சித்திரை வருடத்திற்கு முன்னர் – அரசியல் தீர்வு தொடர்பான ஆரூடங்களை கூறியதுண்டு. இந்தப் பின்புலத்தில் இப்போதும் தீபாவளி தினத்தில், அரசியல் தீர்வு தொடர்பில் பேசியிருக்கின்றார். ஆனால் சம்பந்தன் அவரது அரசியல் வாழ்வின் இறுதிக்காலத்திலாவது, தனது தவறுகளை விளங்கிக் கொள்வதாக தெரியவில்லை.
மீண்டும் முன்னைய தவறான நம்பிக்கைகளையே மீண்டும் முன்வைக்கின்றார். ஒன்றை அடைவதற்கான வழிகளை அறியாமல் – கிளிப்பிள்ளை போன்று, முன்னர் கூறியதையே மீண்டும், மீண்டும் கூறுவதானது, ஒன்றில் சம்பந்தன் முற்றிலும் அறிவை இழந்துவிட்டார் என்பதுபொருள் – அல்லது, அவருக்கு அரசியல் தீர்வை நோக்கி படிப்படியாக முன்னேறுவது தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை என்பதாகும். 2005இல், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, படிமுறை சார்ந்து அரசியல் தீர்வு நோக்கிச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. ஆனால், சம்பந்தனோ நடக்க முடியாத ஒன்றைப் பற்றியே கூறிக்கொண்டிருந்தார். அதாவது, புதிய அரசியல் யாப்பு ஒன்றின் மூலம், முழுமையான அரசியல் தீர்வொன்றை அடைவது. ஆனால் நடைமுறைக்கு சாத்தியமானதல்ல என்பதை பலரும் உணர்ந்திருந்த போதிலும் கூட, அதனை பொருட்படுத்துவதற்கு சம்பந்தன் தயாராக இருக்கவில்லை. ஆனால் இறுதியில் ஆட்சி மாற்றத்திற்கு, தமிழ் மக்கள் ஆதரவளித்தும் எதுவும் நடக்கவில்லை. நம்பினோம் ஏமாற்றி விட்டார்கள் என்றவாறான பழைய கதையுடன், சம்பந்தன் வழமைபோல் விடயங்களை முடித்துக் கொண்டார். இதுமிதவாத அரசியல்வாதிகளின் வாழையடி வாழை.
இலங்கைத் தீவை பொறுத்தவரையில் – முழுமையானதொரு அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிசயமானது. அதிசயங்கள் நிகழ்தால் ஒழிய வேறு எந்தவொரு வழியும் இல்லை. ஆனால் அவ்வாறானதோர் அதியசம் நடக்கும் வரையில் தமிழ் மக்களின் இருப்பே முற்றிலுமாகவே கேள்விக்குள்ளாகிவிடும். இந்த நிலையில், அரசியல் தீர்வு ஒன்றை அடைய முடியுமென்றால் – அது படிமுறை சார்ந்த ஒன்றாகவே இருக்க முடியும். ஏனெனில், அரசியல் தீர்விற்காக பேரம் பேசக் கூடிய பலத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே இருந்தது. ஆனால், அவர்கள் அரசியல் இலக்கை விட்டுக் கொடுப்புக்களற்ற ஒன்றாக புரிந்து கொண்டனர். இதன் காரணமாக அவர்களை அழிப்பது, இலங்கை அரசுக்கு இலகுவானது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால், சம்பந்தன் போன்ற ஒருவரது தலைமையின் கீழ் பேரம் பேசவே முடியாது. இந்த இடத்தில்தான், இந்திய – இலங்கை ஒப்பந்தம் மீண்டும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில் அது ஒன்றுதான் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக இருக்கின்றது. அதன்மூலம் கிடைக்கப்பெற்ற 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்னும் கோரிக்கையிலிருந்து தான், ஈழத் தமிழர்களுக்கான அரசியலை முன்னோக்கி நகர்த்த முடியும். இதனை சம்பந்தனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனை புரிந்து கொண்டிருந்தால், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் சமஷ்டித்
தீர்வை வலியுறுத்தி கடிதம் அனுப்பியிருக்கமாட்டார். இலங்கைத் தீவின் அரசியல் யதார்த்தத்தைப் பொறுத்தவரையிலும், இலங்கைத் தீவின் மீது மென் அழுத்தங்களை பிரயோகித்துவரும் இந்திய, அமெரிக்க தரப்புக்களின் அணுகுமுறையை பொறுத்தவரையிலும் – ஈழத் தமிழ் மக்களுக்கான முழுமையான அரசியல் தீர்வொன்றை பெறுவது எட்டாக்கனியாகும்.