சிறுவர்களின் ஆளுமை விருத்தி மற்றும் உடல், உள,ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் முகமாக ‘பல்சமய சிறுவர் கழகம்’ திறந்து வைக்கப்பட்டது. யூனியன் கொலனி வாழைச்சேனையில் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் அனுசரணையில் தீபாவளி தினத்தினை முன்னிட்டு இன்று சர்வமத பிரார்த்தனைகளுடன் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இலங்கை மெதடிஸ்த திருட்சபை வாழைச்சேனை சேகரத்தின் முகாமைக் குரு அருட் கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு ‘பல்சமய சிறுவர் கழகம்’ வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து; தமிழ் பண்பாட்டுடன் பால் பொங்க வைக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
குறித்த சிறுவர் கழகத்தில் நூலகம்,விளையாட்டு நிகழ்வுகள்,பொழுதுபோக்கு வசதிகள், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள்,சிறுவர் உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு,கலை பண்பாட்டு ரீதியான விடயங்கள் என்பன நடைபெறும் நிலையமாக அமையும்.
அத்துடன் சிறுவர்களை உடல்,உள ஆரோக்கியத்தில் வலுப்படுத்துவது சமயங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துல் அனைத்து சமயங்களின் விழுமியங்களை அறிந்து கொள்ளவும்,இவ் பல் சமய சிறுவர் கழகம் பயன்படும். நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்சிகள் என்பன நடைபெற்றன. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பொதுச் செயலாளர் அருட்பணி சுஜிதர் சிவநாயகம், இலங்கை தேசிய கிறிஸ்தவமன்ற பணியாளர் எம்.எஸ்.சன்றா, மௌலவி ஏ.ஏ.எம்.ஜமீல், அங்கிலிக்கன் திருட்சபை அருட்பணி நே.சபிலாஸ்,மெதடிஸ்தவ திருச்சபை குருவானர் அருட்பணி வி.உதயகுமார், கிராமசேவகர் ஜெ.லோபனராஜ் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர். நிகழ்வில் திருட்சபையின் மக்கள், சிறுவர்கள் சமய வேறுபாடின்றி கலந்து கொண்டனர்.