ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு, நடிகை தமன்னாவிற்கு பதிலாக, சிம்ரனின் முகம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் மாற்றம் செய்யப்பட்ட வீடியோ தமன்னா மற்றும் சிம்ரன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால், ராஷ்மிகா மந்தனாவை வைத்து சித்திரிக்கப்பட்ட ஆபாச வீடியோ வெளியான பிறகே, செயற்கை நுண்ணறிவின் கோர முகமான டீப் ஃபேக் அம்பலமானது. இதன் தீவிரம் அடங்கும் முன்பே, காத்ரீனா கைஃப்பின் ஆபாச புகைப்படமும் சமூக வலைதளங்களில் பரவியது.
அடுத்தடுத்து வெளியான பிரபலங்களின் போலி பிம்பங்களுக்கு பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பினர். இதனை தொடர்ந்து, போலி வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்கினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்தது. இந்நிலையில், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப, போலி வீடியோக்களுக்கான கடிவாளத்தை யூ-டியூப் தளமே தற்போது கையில் எடுத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை யூ-டியூப்பில் இருந்து விரைவில் நீக்க உள்ளதாக அதன் துணைத் தலைவர் எமிலி மோக்ஸ்லே மற்றும் ஜெனிஃபர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தங்களது வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்கள், எதிர்வரும் மாதத்தில் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் உருவாக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.