வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய அணில் சேமியா பாக்கெட்டில் இறந்து காய்ந்துபோன நிலையில் தவளை இருந்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தேவகோட்டையை சேர்ந்த பூமிநாதன் என்பவர் தீபாவளி பண்டிகைக்கு சமைப்பதற்காக மளிகைப் பொருட்களை அங்கிருந்த ஒரு கடையில் வாங்கியுள்ளார்.
அதில் அணில் சேமியாவை அவர் சமைப்பதற்காக நேற்று திறந்து பார்த்தபோது இறந்து காய்ந்துபோன தவளை இருந்தது. உடனே மளிகைக்கடையில் போய் புகார் கூறினார் .
அதற்கு அந்த கடைக்காரரோ நான் பேக்கிங்கை பிரித்து பார்க்கவில்லை பிரபல கம்பெனி என்பதால் வாங்கி விற்பனை செய்கிறேன். இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
மிகப்பெரிய கம்பெனியாக இருப்பதால் இதை மறைக்காமல் உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதே நேரத்தில் தொழிற்சாலையில் இது போன்ற தவறு நடக்க வாய்ப்பு இல்லை என்று அணில் சேமியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான அணில் அப்பளம் பாக்கெட்டை விற்பனை செய்ததாக திண்டுக்கல்லில் உள்ள ஒரு கடை மீது புகார் எழுந்தது. தற்போது சேமியா பாக்கெட்டுக்குள் இறந்து போன தவளை இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.