2024 பட்ஜெட் மீதான வாக்கெடுப்பை சீர்குலைக்கும் முயற்சியாக அல்பேனிய நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
2024 வரவு செலவுத் திட்டத்தில் வாக்களிப்பதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியுற்ற அல்பேனியாவின் எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள், நாடாளுமன்ற அவையின் நடுவில் புகை குண்டுகளை வீசியதுடன், தீ வைத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாதுகாவலர்கள் பிரதமர் எடி ராமாவை அவரது இருக்கையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்.
முதலில் எம்.பி., ஒருவர் பற்ற வைத்த தீ மளமளவென பரவத் தொடங்கியது. இதையடுத்து, சுற்றியிருந்த உறுப்பினர்கள் அந்த தீயை அணைத்தனர்.
இதனால் பிரதமர் ராமாவின் சோசலிஸ்ட் கட்சி பெரும்பான்மையாக உள்ள நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் வாயடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், 1992 முதல் 1997 வரை அல்பேனியாவின் முதல் கம்யூனிஸ்ட் அதிபராக இருந்த முன்னாள் பிரதமரும், ஜனநாயகக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவருமான சாலி பெரிஷா குற்றம் சாட்டியுள்ளார்.
பட்ஜெட்டுக்கான முதல் வாக்கெடுப்பு பதிவானதும் அவையில் ஏற்பட்ட குழப்பத்தினால், ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாக நடைபெற்ற அமர்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சாலி பெரிஷா, “பாராளுமன்றத்தில் பன்மைத்துவத்தை கொண்டு வருவதே எங்கள் குறிக்கோள்.” என்றார்.
அதேசமயம் கடந்த மாதம் பெரிஷா மற்றும் அவரது மருமகன் மீது விளையாட்டுக் கழக மைதானம் தொடர்பான நில ஒப்பந்தம் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 2005 முதல் 2009 வரை பிரதமராக இருந்த போது, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, தனது மகளின் கணவர் உட்பட மற்றவர்களுக்கு ஆதரவாக தனியார்மயமாக்கல் நடைமுறைகளை முடிப்பதற்காக அழுத்தம் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டில் அவரது மருமகன் கைது செய்யப்பட்டார். ஆனால், எம்.பி.யாக இருப்பதால் வழக்கு தொடுப்பதில் இருந்து அவருக்கு விலக்கு உண்டு. இருப்பினும், அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சாலி பெரிஷா, தன் மீது வழக்கு தொடர பிரதமர் எடி ராமா அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இதனை பிரதமர் மறுத்துள்ளார்.
இதனால் அவையில் நேற்று முன்தினம் 20 ஏற்பட்ட குழப்பங்களுக்கு பிறகு பிரதமர் ரமா தனது எக்ஸ் பக்கத்தில், “தெருக்களில் இருக்கும் பழக்கவழக்கங்களை எதிர்க்கட்சிகள் அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர்.” என பதிவிட்டுள்ளார்.