அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முகப் புத்தகத்தில் கருத்துக்கள் பதிவிடுவதும் பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறான செயற்பாடுகளுக்கு 20 வருடகால சிறை தண்டனை விதிக்கப்படலாம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் பயங்கரவாதத்துக்கு எதிரானதல்ல, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஆகவே இதனை ஏற்பதா இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என சட்டத்தரணி ஹர்ஷ நாணயக்கார தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டு மக்களின் ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகளை முழுமையாக இல்லாதொழிக்கும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த மாதம் 17 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டது.
சிவில் அமைப்பினர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இந்த சட்டம்
பாரிய அச்சுறுத்தலாக அமையும்.நாட்டில் யுத்தம் என்பதொன்று தற்போது இல்லை. இருப்பினும் கடுமையான விடயங்களை உள்ளடக்கிய வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு
வர அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. சாதாரண தண்டனை சட்டகோவையின் பிரகாரம் தண்டனை வழங்கக் கூடிய குற்றங்களை கூட இந்த சட்டத்தில் பயங்கரவாத செயற்பாடாக சித்திரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக எழும் மக்கள் போராட்டத்தை முடக்குவதற்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது, அதனை விடுத்து பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான நோக்கம் ஏதும் கிடையாது. இந்த சட் டம் பயங்கரவாதத்திற்கு எதிரானதல்ல, ஜனநாயகத்திற்கு எதிரானது.
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் பாரதூரமானது. ”பயங்கரவாதம்” என்ற சொற்பதத்திற்கு நீண்ட வரைவிலக்கணம் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த வரைவிலக்கணம் ஒன்றுக்கொண்டு முரண்பட்டதாக உள்ளது.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் 3(2) உறுப்புரையில்
பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்,சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடல், தனிப்பட்ட கருத்துக்களை வெளிப் ப டுத்தல் மற்றும் குழுக்களில் இணைதல் என 13 விடயங்கள் பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விடயங்கள் சிறந்தது தானே என ஒரு தரப்பினர் குறிப்பிட முடியும். நடைமுறையில் உள்ள தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் இந்த விடயங்களுக்கு தண்டனை வழங்க முடியும், பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்த வேண்டிய தேவை இல்லை.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கர வாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த காலங்களில் சட்டமாக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டிருப்பார்கள் , ஆகவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம்
என்பது விசம் கலந்த ஜஸ்கிறீம் என்று குறிப்பிட வேண்டும்.அரசாங்கத்துக்குஎதிர்ப்பு தெரிவித்து முகப்புத்தகத்தில் கருத்துக்கள் பதிவிடுவதும் பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறான செயற்பாடுகளுக்கு 20 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்,ஆகவே ஜனநாயகத்திற்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்புதடைச்சட்டத்தை ஏற்பதா இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். – என்றார்.