எனது மகன் தற்போது 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார், அவரது புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் குறித்து பலர் என்னிடம் கேட்கின்றனர். அவர் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவில்லை என நான் பதிலளித்தேன், இது பெரும்பாலானோரை ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் இந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதற்காக நடத்தப்படுகிறது என்பது நம்மில் பலருக்குப் புரியவில்லை. இந்த தேர்வு இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது:
1) நன்கு படிக்கும் மாணவர் ஒருவர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தில் இருப்பவரானால், இப்பரீட்சியில் தேர்ச்சி பெறுவது மூலம் அரசாங்கம் வழங்கும் உதவித்தொகையை அவரது கல்விக்காக பெறமுடியும்.
2) திறமையான மாணவர் குறைந்த வளங்களைக் கொண்ட பின்தங்கிய பாடசாலை ஒன்றில் படிக்கும் சந்தர்ப்பங்களில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் நாட்டில் உள்ள சிறந்த பாடசாலை ஒன்றிற்கு அனுமதி பெற முடியும்.
கண்டியின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான திரித்துவக் கல்லூரியில் (Trinity College) எனது மகன் கல்வி கற்கிறார்; எனவே மேற்கூறிய இரண்டு நோக்கங்கள் ஒன்றுக்காகவும் எனது மகன் பரீட்சை எழுதவேண்டிய அவசியம் இல்லை எனும்போது நான் இந்த தேவையில்லாத அதுவும் சமூகத்திலும், மாணவர்கள் பெற்றோர்கள் மனதிலும் பாரிய தாக்கங்களை தற்போது ஏற்படுத்திவரும் இந்த பரீட்சையை ஏன் எழுத சொல்ல வேண்டும்? Trinity College ஆனது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுதந்திரம் அளிக்கிறது; மாணவர் பரீட்சை எழுத விரும்பினால் மட்டுமே பதிவு செய்து பரீட்சை எழுத முடியும். இது Kandy Trinity College செய்யும் ஒரு பாராட்டக்கூடிய விடயம் (மற்றய பெரிய பாடசாலைகளும் இதை பின்பற்றி தங்கள் பிரதேசத்தில் உள்ள பின் தங்கிய பாடசாலை மாணவர்களுக்கான வாய்ப்பை அதிகரித்திட உதவிட வேண்டும்). எனவே, எனது மகன் பரீட்சையில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்தோம்.
எனது மகன் 4 ஆம் வகுப்பு அல்லது அதற்கு முன்பு படித்ததைப் போலவே பாடசாலையில் 5 ஆம் வகுப்பை முடிக்க போகிறார். அவர் வகுப்பில் சிறப்பாகச் செயல்படுகிறார், பெற்றோர்களாகிய நாங்கள் அவரது கல்வி மற்றும் இணைப்பாடவிதான விடயங்களில் அவரது செயற்பாடுகளில் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த புலமைப்பரிசில் பரீட்சையில் எனது சொந்த அனுபவத்தையும் நினைவுகூர்கிறேன். 1987 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை (அப்போது இத்தேர்வு தரம் 6 இல் நடைபெறும்) பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான (அப்போது மிகவும் பின்தங்கிய பாடசாலை) புளியாவத்தை TMV இல் எடுத்தேன். நிச்சயமாக, நான் படிக்கும் போது என் பெற்றோர்கள் எனக்கு ஒருபோதும் சிரமம் கொடுக்கவில்லை, பல tution classகள் சென்றதில்லை (ஆனால் இப்போது பல பெற்றோர்கள் அப்படி இல்லை, இது தற்போது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான கௌரவ பரீட்சையாக மாறிவிட்டது).
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், என்னால் 27 நாட்கள் மட்டுமே அங்கு படிக்க முடிந்தது. என்னை மீண்டும் புளியாவத்தை TMVக்கு அழைத்துச் செல்லும்படி எனது தந்தைக்கு தினமும் கடிதம் எழுதினேன். பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஒரு மிகவும் சிறந்த பாடசாலை ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வயதில் எனக்கு அப்பாடசாலை பொருத்தமாக இருக்கவில்லை, நான் அதுவரை ஹட்டன் டவுனுக்கு (எனது கிராமம்/ தேயிலை தோட்டத்திற்கு அருகிலுள்ள நகரம்) கூட சென்றதில்லை. 12 வயதில் கொழும்பு எனக்கு புதிய சூழல், அப்பாடசாலையில் என் சக மாணவர்களை (அவர்களில் பெரும்பாலோர் மிகவும் பணக்காரர்கள், மற்றும் “பெரிய உருவம் உடையவர்கள்”), ஆசிரியர்கள், கட்டிடங்கள் மற்றும் சாலைகள், வாகனங்களைப் பார்த்து பயந்தே போனேன். சிறிது காலம் கழித்து சரியாகிவிடும் என்று என் தந்தை நினைத்தார், ஆனால் அவர் தினமும் நான் அழுதுகொண்டே எழுதி அனுப்பும் கடிதங்களை கண்டவுடன் இறுதியில் என்னை கொழும்பில் இருந்து அழைத்து சென்று மீண்டும் புளியாவத்தை TMVக்கே சேர்த்துவிட்டார்.
சாதாரண தோட்ட தொழிலாளியான எனது தந்தை அவரது வரம்பிற்கு மீறி தியாகம் செய்து என்னை பெரிய பாடசாலையில் படிக்க வைக்க நினைத்தார். நான் எப்படியாவது சிறந்த கல்வியை கற்றிட வேண்டும் என அவர் பட்ட கஷ்டங்களை மிகவும் அருகில் இருந்து பார்த்ததாலேயே என் அறிவிற்கு எட்டிய வரையில் என்னால் கல்வியில் சிறந்து பயணித்திட முடிந்தது. என்னை எனது தந்தை படி படி என வற்புறுத்தியதில்லை, மாறாக நான் நீண்ட நேரம் இரவில் கண்முழித்து படிப்பதை பார்த்து என்னை சீக்கிரம் படுக்க சொல்லியே சொல்வார். எனது மிகப்பெரிய பலமே என் தந்தையின் அர்ப்பணிப்பு தான். அவரைப் போல ஒரு 50% ஆயினும் எனது மகனுக்கு நான் ஒரு தந்தையாக இருந்தாலே பெரிய விடயம். எனது கல்விப் பயணம் புளியவத்தை TMV யில் இருந்து மீண்டும் தொடங்கியது, இப்போது நான் எனது கனவிலும் நினைத்திராத ஒரு இடத்தில் இருக்கிறேன் என்பதே உண்மை.
பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் பரீட்சையின் மூலம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகவும் கடினமான சுமையை கொடுக்கிறார்கள். புலமைப்பரிசில் பரீட்சை ஒரு சிறந்த வியாபாரமாகவும் மாறிவிட்டது. உண்மையில், குழந்தைகள் இன்னும் இந்த சுமையை புரிந்து கொள்ளும் அளவு முதிர்ச்சி அடையவில்லை. எனவே, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிள்ளைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் பிள்ளை சித்தி அடைந்தாலும் அல்லது தோல்வியடைந்தாலும், கல்வியின் பெறுமதியை பற்றிய அவர்களின் புரிதல் காலப்போக்கில் தெரிய ஆரம்பிக்கும். கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவும் சூழலை அவர்களுக்கு உருவாக்குங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள் மற்றும் பிறருக்கு மரியாதை கொடுப்பதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள், ஏனெனில் இந்த பண்புகள் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிக முக்கிய பங்களிக்கும்.