ஆட்கடத்தல் செயற்பாடுகளை முறியடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆட்கடத்தல் நிலைவரம் குறித்து அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
“ஆட்கடத்தலை முற்றாக முடிவுக்குக் கொண்டு வருவதற்குரிய குறைந்தபட்ச தராதரங்கள் இலங்கை அரசாங்கத்தினால் இன்னமும் முழுமையாக எட்டப்படவில்லை. இருப்பினும் அதனை எட்டுவதற்கான குறிப்பிடத்தக்களவிலான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.
ஆட்கடத்தலில் ஈடுபடுவோரைக் கைதுசெய்தல் மற்றும் தண்டனை வழங்கல், ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச கட்டமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கல் போன்றன இம்முயற்சிகளில் அடங்குகின்றன.
அதுமாத்திரமன்றி ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட பெருமளவானோர் அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பெண்கள் ஆட்கடத்தலுக்கு இலக்காகக்கூடிய வாய்ப்பை அளித்த சில நெருக்கடியான குடியகல்வு கொள்கைகள் மறுசீரமைக்கப்பட்டன.
ஆட்கடத்தலுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முகவர் நிலையங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அவற்றின் அனுமதிப்பத்திரங்கள் இரத்துச்செய்யப்பட்டதுடன் அவை கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டன. எது எவ்வாறெனினும் சில முக்கிய விடயப்பரப்புக்களில் இலங்கை அரசாங்கம் குறைந்தபட்ச தராதரங்களைப் பூர்த்திசெய்யவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் ஆட்கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிரான விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தல், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தல், பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான உதவிகள் மற்றும் சேவைகளின் கிடைப்பனவை உறுதிசெய்தல், வெளிநாட்டுப்பயண முகவரகங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்க முன்னர் உரியவாறு கண்காணித்தல், குடியகல்வு வழிகாட்டல்கள் பால் அடிப்படையில் வேறுபடாதிருப்பதை உறுதிப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.
மேலும், வீட்டுப்பணியாளர்களுக்குரிய வழிகாட்டல்களை சீராக வகுப்பதுடன், அவர்களது பணியிடத்தைக் கண்காணித்தல், தொழிலாளர் சார்ந்த ஆட்கடத்தலைக் கண்டறிவதற்கான வள ஒதுக்கீடுகளை அதிகரித்தல், ஆட்கடத்தல் தொடர்பில் பொலிஸார், நீதிபதிகள், குடிவரவு – குடியகல்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் விழிப்புணர்வூட்டல் ஆகிய நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டும்.” என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.