அடக்குமுறைகள் நெருக்குதல்கள் அதிகரிக்கும்போது,அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக வீறுகொண்டு எழுகின்ற நிலைப்பாடுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
போர் நின்றுவிட்டது நாங்கள் சகல விடயங்களையும் செய்யமுடியும் என நாங்கள் எதிர்பார்க்கமுடியாது.துப்பாக்கி சத்தங்கள் இல்லையே தவிர அதே போர் சூழலில்தான் தமிழ் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் கூட்டம் இன்று மட்டக்களப்பில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினமான கோவிந்தன் கருணாகரமின் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்தினை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஆயுதப்போராட்டங்கள் தொடங்கியதே அடக்குமுறைகளுக்கு எதிராகத்தான். இந்த அடக்குமுறை என்பது தொடர்ச்சியாக இருக்கும். சிங்கள தேசத்தின் அனைத்து விடயங்களையும் பார்க்கும்போது ஒட்டு மொத்தமாக தமிழர்களின் தேசத்திற்கு எதிரான செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றது.
ஒவ்வொரு விடயத்திலும் எமது பிரதேசம் பறிபோகும் நிலையில் இந்த அடக்குமுறைகள் என்பது எதிர்பார்க்கவேண்டிய விடயம். ஆயுதப்போராட்டம் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகவே கிளர்ந்தெழுந்தது. எங்களைப்பொறுத்த வரையில் அடக்குமுறைகள் நெருக்குதல்கள் அதிகரிக்கும்போது,அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக வீறுகொண்டு எழுகின்ற நிலைப்பாடுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் சாத்தியக்கூறுகள் இப்பொழுது காணப்படுகின்றன.அந்த வகையில் எமது மக்கள் இதற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள்.
நேற்று ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவர் மாவீரர்களின் குடும்பங்களை கௌரவித்ததே தவறாக பார்க்கப்பட்டுள்ளது.அதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த விடயத்தில் நாங்கள் பின்நோக்கி செல்லமுடியாது.மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.அதற்கான ஆதரவினை நாங்கள் தொடர்ச்சியாக வழங்குவோம்.போர் நின்றுவிட்டது நாங்கள் சகல விடயங்களையும் செய்யமுடியும் என நாங்கள் எதிர்பார்க்கமுடியாது.துப்பாக்கி சத்தங்கள் இல்லையே தவிர அதே போர் சூழலில்தான் தமிழ் மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.இந்த மண்ணுக்காக உயிர்நீர்த்த அனைவரையும் நாங்கள் அஞ்சலி செலுத்தவேண்டும்.