லயன்ஸ் கழகம் வுளு ஸப்பஃயர் கொழும்பின் (Colombo blue sapphire) அங்கத்தவர்களது சொந்த நிதிப் பங்களிப்பில் போரதீவுப்பற்று மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (25) வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கமைய வெல்லாவெளிப் பகுதியில் இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றது. இதன்போது இலவசமாக 339 நபர்களுக்கும் மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டதோடு, கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் போதையொழிப்பு விழிப்புணர்வு செயலமர்வும், வாழ்வாதாரத்திற்குரிய மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டது.
இவ் இலவச மருத்துவ முகாமில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அதிகமானோர் கலந்து கொண்டு தங்களது மருத்துவ தேவையினைப் பூர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வம்மியடியூற்றுக் கிராமத்தில் வாழும் மக்களுக்காக நீர்த்தாங்கி மற்றும் அதனை வைப்பதற்கான ஸ்டான்ட் மற்றும் யானை தொல்லைகள் உள்ள பகுதியில் இருளடைந்து காணப்படும் வீதிகளுக்கான மின் விளக்குகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அதேபோன்று விடுதிக்கல் மற்றும் மாவடிமுன்மாரி கிராமங்களுக்கு உலர் உணவுப் பொதிகள், வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டதோடு, நீர்த்தாங்கி மற்றும் அதனை வைப்பதற்கான ஸ்டான்ட் மற்றும் யானை தொல்லைகள் உள்ள பகுதியில் இருளடைந்து காணப்படும் வீதிகளுக்கான மின் விளக்குகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் குறிப்பிட்ட வீதி விளக்குகளைப் பொருத்தும் நடவடிக்கை கள் முன்னெடுக்கப்பட்டது.
கணேசமூர்த்தி கோபிநாத்தின் வழிகாட்டலில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மேற்படி லயன்ஸ் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.