இலங்கை நாடாளுமன்றத்தின் நேரலை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டுமென பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் நடத்தைகள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் இதற்கமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் நாடாளுமன்றில் கேள்வியொன்றை எழுப்ப முயன்ற போது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக கூச்சலிட்டு அதற்கு இடையூறு விளைவித்திருந்தனர்.
நிஷாந்தவின் நாடாளுமன்ற சேவையை இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்துவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த இருவருக்கான முறுகலுக்கு எதிர்க்கட்சித் தலைவரே காரணமென நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் காலத்தை சஜித் பிரேமதாச வீணடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.