மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதி மாதிரி கிராமம் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வு நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படும் விவேகானந்தபுரம் பகுதியினை இலண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரனையுடன் அகிலன் பவுன்டேசன் முன்னெடுத்துவருகின்றது. இதன்கீழ் இரண்டாம் கட்ட நிகழ்வு நேற்று மாலை அகிலன் பவுன்டேசனின் இலங்கைக்காக பணிப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் தலைவரும் அகிலன் பவுன்டேசனின் ஸ்தாபகருமான கோபாலகிருஸ்ணன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பிரபாகரன் மற்றும் கிராம சேவையாளர்கள்,கிராம முக்கிஸ்தர்கள்,மததத்தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இதன்போது கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான பல்வேறு உதவிகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பல்வேறு உதவிகள்,கிராம பொது அமைப்புகளுக்கான உதவிகள்,விளையாட்டுக்கழகங்கள் மற்றும் அறநெறிப்பாடசாலை என பல்வேறு உதவித்திட்டங்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டதுடன் முன்னாள் போராளி ஒருவருக்குமான உதவிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படும் விவேகானந்தபுரம் பகுதியினை தேர்ந்தெடுத்து மாதிரிக்கிராமம் என்ற அடிப்படையில் அப்பகுதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் இலண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் தலைவரும் அகிலன் பவுன்டேசனின் ஸ்தாபகருமான கோபாலகிருஸ்ணன், அகிலன் பவுன்டேசனின் இலங்கைக்காக பணிப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் ஆகியோர் இதன்போது கிராம மக்களினால் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.