வடக்கு – கிழக்கில் உள்ள சிறுவர்கள் விடுதலைப் போராளிகளை போல் ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றதை கடும் போக்குவாத அமைப்பான சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர் விமர்சித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், அண்மையில் வடக்கு, கிழக்கில் விடுதலை புலிகளை நினைவு கூரும் நிகழ்வொன்று இடம்பெற்றது.
இலங்கையின் பயங்கரவாத இயக்கமாக விடுதலை புலிகள் இயக்கம் கருதப்படுகிறது. இது ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் நினைவேந்தல்களை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது.
விடுதலை புலிகளின் சமாதிகளை வைத்து இந்த நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. விடுதலை புலிகள் இயக்கத்தினரை போன்று அங்குள்ள சிறுவர்களுக்கு ஆடை அணிவித்து இந்த நினைவேந்தல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் யுத்த மனநிலையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கிறார்கள். எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தவறான உதாரணங்களை இதன் மூலம் காட்டுகிறார்கள்.
அத்துடன், எமது தரப்பினர் இந்த சிறுவர்களிடமிருந்து நாட்டை பறிப்பது போலான எண்ணத்தை சிறுவயதிலேயே அவர்களுக்குள் வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள் திணிப்பார்கள்.
இந்த நிலையில், இவ்வாறாக முன்னெடுக்கப்படும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக முப்படையினர் நடவடிக்கை எடுக்க வெண்டும்.
இலங்கையில் தற்போது பயங்கரவாதம் என்ற ஒன்று கிடையாது. எதிர்காலத்தில் மீண்டுமொறு யுத்தம் இலங்கையில் நடைபெற கூடாது. இலங்கையில் அனைத்து மக்களும் தற்போது ஒற்றுமையாக வாழ்கிறார்கள். என்றார்.