மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள அரபாநகர் பிரதேசத்தில் ஜஸ் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரி ஒருவரை 9 கிராமும் 09 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் நேற்று முன்தினம் (04) இரவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் மேற்பார்வையில் வலய கட்டளைத் தளபதி அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் பணிப்பாளர் நெட்டசிங்க மற்றும் மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் பணிப்பாளர் விடவிதனவின் வழிகாட்டலின் பிரகாரம்,
வாழைச்சேனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.ஜி.லக்மால்குமார தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான நேற்று இரவு 11 மணியளவில் அரபாநகர் பகுதி வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த வீதிவழியாக வியாபாரத்துக்காக ஜஸ் போதை பொருளை எடுத்துச் சென்ற வியாபாரியை மடிக்கிபிடித்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 9 கிராமும் 9 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளை மீட்டனர்.