மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேசத்தில் இதுவரையில் 75 டெங்கு நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி எப்.எஸ்.எம்.வாஷிம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினரினால் திடீர் சோதனை நடவடிக்கையினால் அரச திணைக்களங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள ஏறாவூர் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் தொடர்ச்சியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கொழும்பு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் ஏறாவூர் சுகாதார வைத்திய அலுவலகம் இணைந்து இன்று காலை இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்று காலை ஏறாவூர் – இலங்கை தொலைத்தொடர்பு நிலைய வளாகம், ஏறாவூர் – இ.போ.ச வளாகம் உட்பட அரச திணைக்களங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
சில இடங்களில் டெங்கு நோய் பரப்பும் நுளம்புகளின் குடம்பிகளும் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பகுதியை துப்பரவு செய்யப்பட்ட வேண்டியதன் அவசியம் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் தமது பகுதிகளை தூய்மையாக வைத்திருந்து டெங்கு தாக்கங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி எப்.எஸ்.எம்.வாஷிம் வேண்டுகோள் விடுத்தார்.