முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த சம்பள கொடுப்பனவை 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதுடன் அவர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சிறுவர்கள் மகளிர் வலுவூட்டல்கள் மற்றும் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாளைய தலைவர்களாக இன்றைய சிறுவர்களை பாடசாலைகள் வலுப்படுத்தி தயார்படுத்துவதற்கு முன்பள்ளி ஆரம்ப இடமாக காணப்படுகின்றது. அங்கு கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியர்கள் பல்வேறு கஷ்டங்களையும், தியாகங்களையும் செய்து அந்தச் சேவையை முன்னெடுக்கின்றனர். அவ்வாறு செய்கிறவர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவு மிகவும் குறைவாக காணப்படுகின்றது.
மாதாந்தம் 4000 ரூபாயாக வழங்கப்படுவதாக கூறப்படுகின்ற இத்தொகை, ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுவதில்லை. இத்தொகை மூன்று மாதங்களுக்கு ஒரு முறையே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றது. இக்கொடுப்பனவு மிகவும் குறைவானதாகும். இந்தத் தொகையை குறைந்தபட்சம் 20,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
முன்பள்ளி ஆசிரியர்கள் தங்களின் டிப்ளோமா பயிற்சி நெறியை பூர்த்தி செய்து கொள்வதற்கும் அங்கீகரிக்கப்பட்ட திறந்த பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் எனவும் அவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என கூறியிருந்தார்.