கிரிக்கெட் விளையாட்டை அரசியல் தலையீடின்றி பேணுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டார்.
2030 இல் கிரிக்கெட் விளையாட்டு எங்கு இருக்க வேண்டும் என்ற இலக்கு தனக்கு உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதனை கருத்திற்கொண்டே இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபாவை பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்காக ஒதுக்கியதாகவும், எதிர்காலத்தில் அதனை வருடாந்தம் 02 பில்லியன் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இதன்மூலம், சகல செயற்பாடுகளையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்து, எதிர்பார்த்த இலக்குகளை அடைவதே தமது எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். (a)