தபால் ஊழியர்கள் முன்னேடுத்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக, மத்திய தபால் நிலையம் உட்பட ஏனைய தபால் நிலையங்களில் சுமார் 7 இலட்சம் கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கிக் கிடப்பதாக தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய தபால் பரிமாற்றத்தில் மாத்திரம் சுமார் 4 இலட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால் பொருட்கள் சிக்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சம்பத் லியனகே தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தம் காரணமாக நேற்று (11) மத்திய தபால் நிலைய நடவடிக்கைகள் உட்பட அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டதுடன் சில தபால் நிலையங்கள் பூட்டி மூடப்பட்டிருந்தன.
தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
27000 தபால் ஊழியர்கள் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.