“இந்தியாவின் பாதுகாப்பும் இலங்கையின் பாதுகாப்பும் பின்னிப்பிணைந்த ஒன்று”, என்று இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்திருக்கின்றார். இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைந்திருக்கும் நாடுகள் என்னும் அடிப்படையில் பாதுகாப்பு விவகாரங்களில் ஏற்படும் பிணக்குகளை சரி செய்வதற்கு இரண்டு நாடுகளுமே இணைந்து செயல்பட வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கை ஓர் உடனடி அயல்நாடு என்னும் வகையில் இலங்கையின் வெளிவிவகார அணுகுமுறைகள் இந்தியாவின் அதிக கரிசனைக்கு உரியவையாகும். குறிப்பாக, சீனாவின் யுத்த மற்றும் உளவுக் கப்பல்கள், ஆராய்ச்சி என்னும் பெயரில் இலங்கைக்குள் பிரேவேசிப்பதானது எப்போதுமே சிக்கலானதுதான். ஆனால், இலங்கையின் ஆட்சியாளர்களோ இந்த விடயத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வதாக தெரியவில்லை. ‘நடுநிலை வெளிவிவகாரக் கொள்கை’ – என்னும் அடிப்படையில் சீனாவின் உள்நுழைவுக்கும் செங்கம்பளம் விரிக்கும் நடவடிக்கைகளையே கொழும்பு முன்னெடுத்து வருகின்றது.
வடக்குக்குள் சீனாவின் உள்நுழைவிலுள்ள நீண்டகால சிக்கல்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் எச்சரித்து வருகின்றனர். சீனாவானது அரசாங்க திட்டங்களின் ஊடாகவே, வடக்கு – கிழக்குக்குள் உள்நுழைய முயற்சிக்கின்றது. குறிப்பாக வடக்கின் மீன்பிடித் துறையில் சீனா முதலீடுகளை செய்வதும் அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பில் வடபுல மீனவர் அமைப்புகள அச்சம் கொண்டுள்ளன. அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களின் அச்சங்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
சீனாவுக்கு அருகிலுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில் இடம்பெற்றுள்ள ஒரு விடயமானது சீனா தொடர்பான அச்சங்களை நியாயப்படுத்துகின்றது. அதாவது, பிலிப்பைன்ஸ் கடல் எல்லைக்குள் ஊடுருவிய, சீனாவின் கடல் (மீன் பிடி) இராணுவ பிரிவு மற்றும் கடலோர காவல் படையினர் பிலிப்பைன்ஸ் மீன்பிடி படகுகள்மீது தாக்குதல்களை மேற்கொண்டன என்று கூறியிருக்கின்றது. பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் விளக்கம்கோரி, விசாரணைக்கு அழைத்திருக்கின்றது. சீனாவின் அத்துமீறல்கள் தொடர்ந்தும் பிலிப்பைன்ஸ் மீன்பிடி படகுகள் மற்றும் கப்பல்கள் அச்சுறுத்தலுக்குஉள்ளாகின்றன என்று பிலிப்பைன்ஸ் கூறுகின்றது.
மீன்பிடிக்கான இராணுவப் பிரிவை ஒரு தனிப் படைப் பிரிவாக வைத்திக்கும் ஒரேயொரு நாடு சீனா மட்டும்தான். இந்தநிலையில் சீனா வடக்கின் மீன்பிடித் துறைக்குள் முதலீடுகளை செய்ய முற்படுவதை எச்சரிக்கையுடன்தான் நோக்க வேண்டும். இந்த பின்புலத்தில், அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களான சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வடக்கு மாகாணத்துக்குள் சீனாவை அனுமதிப்பதிலுள்ள நீண்டகால சவால்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தனர். தமிழரின் பாரம்பரிய வாழ்விடங்களுக்குள சீனாவை தேவையற்ற வகையில் அனுமதிப்பதானது நீண்டகால அடிப்படையில புவிசார் அரசியல் பதற்றங்களை ஏற்படுத்துமென்று எச்சரித்திருந்தனர். அவர்களின் பார்வையில் தவறில்லை.
இலங்கை அரசாங்கமோ – நடுநிலை என்று கூறிக்கொண்டு, சமவேளையில், சீனாவையும் இந்தியாவையும் கையாள முடியுமென்று எண்ணுகின்றது. இது ஆபத்தானது. ஏனெனில், பனிப்போர் காலத்தை கையாளுவதில் ரணிலின் மாமனார், ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் தவறுகள் ஒரு படிப்பினையாகும். அன்றைய பனிப்போர் அரசியல் ஒழுங்கு தற்போது வேறு வடிவம் கொண்டிருக்கின்றது. இதில் அடிப்படையானது சர்வாதிகார சீனாவின் எழுச்சியாகும். இந்த நிலைமையை இலங்கை கருத்தில் கொண்டு செயல்படுகின்றதா என்பதில் சந்தேகங்கள் உண்டு. வடக்கு – கிழக்கை அடிப்படையாகக் கொண்டு, இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய தரப்புகள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.