ஜனாதிபதி மீது உயர்மட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இருப்பதன் காரணமாக அவர்களிடையே உள்ள முரண்பாடுகளை வைத்து மக்களை வதைக்கும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறையில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேற்றைய தினம் (16) பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சென்று பார்வையிட்டார்.
கடந்த 27ஆம் திகதி மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நினைவேந்தல் தினத்தற்கு மாவீரர் நினைவேந்தல்களில் ஈடுபட்டவர்களை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்ற அடிப்படையில் பெண்ணோருவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் நேற்று சிறைச்சாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அதனை தொடர்ந்து சிறைச்சாலை ஆணையாளர் பிரபாகரனுடனும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து கொண்டதாக தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
ஜனவரி மாதம் 06ஆம் திகதி உயர்தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர் ஒருவரும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்தேன்.
கடந்த வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு தினத்தன்று நானும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் ஜனாதிபதியை சந்தித்தபோது மயிலத்தடு பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம் அத்துடன் பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம். அந்த நேரத்தில் இது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல பொலிஸாரின் தவறான செயற்பாடுகள் போல் எங்களிடம் ஜனாதிபதி தெரிவித்திருந்தாலும் கூட இது தொடர்பிலும் இன்னும் நடவடிக்கையெடுக்கப்படவில்லை.
நாங்கள் இன்று சிறைச்சாலைக்குள் இருக்கும் போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்கவை தொடர்புகொண்டு இது தொடர்பில் பேசியிருந்தேன்.இதன்போது குறித்த உயர்தரம் கற்கும் மாணவனின் விபரத்தை உடனடியாக அனுப்புமாறு கோரியிருந்தார்.
எங்களின் அழுத்தங்கள் காரணமாக உலகநாடுகள்,மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த கைதுகளுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்திருந்தார்கள். கைதுசெய்யப்பட்டவர்களை பிணையிலாவது விடுதலைசெய்வதற்கான முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்துவருகின்றோம்.அவர்கள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து விடுதலை செய்யப்படும் வரையில் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவோம்.
இவர்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு சென்றது 10வீதம் வீதி ஒப்பந்ததிற்கு தரகுப்பணம் வாங்கவோ,அரசாங்கதிடம் சலுகைகளைப்பெற்றுக்கொள்வதற்கோ அல்ல.இந்த மண்ணுக்காக உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே சென்றிருந்தார்கள்.
இன்று வீதி புனரமைப்பு என்ற பெயரில் பாரிய மோசடிகள் நடக்கின்றது.இன்று பெய்யும் மழைக்கே வீதிகள் கழுவப்பட்டுச் செல்லும் நிலையே காணப்படுகின்றது.இவ்வாறு பாரிய மோசடிகள் நடைபெறுகின்றது.இவ்வாறான மோசடிகளினால் அவர்கள் சிறைக்கு செல்லவில்லை.தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றுதான் இன்று சிறையிலிருக்கின்றார்கள்.
மக்களுக்கும் பொறுப்பிருக்கின்றது இவர்களுக்காக நாங்கள் ஒன்றாக நின்று குரல் கொடுக்கவேண்டும். அதேசமயம் நாட்டில் இன்னொரு புறம் பார்த்தால் வேடிக்கையான ஒரு விடயம் கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனதின் பிற்பாடு நாட்டில் எவ்வாறு நிலவரம் இருந்தது மீண்டும் இந் நிலவரம் மாறி இருக்கின்றது இப்போது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ். ஏன் இதனை கூறுகின்றேன் என்றால் கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதியாக வந்தவுடன் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மீண்டும் ஒரு ஆயுதமாக எடுக்கப்பட்டது கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதியாக வந்தவுடன் வீடியோ அபிவிருத்தி என்ற போர்வையில் பாரிய மோசடிகள் இடம் பெற்றது. அத்தோடு இந்த நாட்டிலே விவசாயிகள் உரம் இல்லாமல் பல பிரச்சினைகள் எதிர் நோக்கினார்கள் இன்று அதே அனைத்து பிரச்சினைகளையும் மக்கள் மனம் கொடுத்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
நாங்கள் இந்த மயிலத்தமடு விடயத்தில் எங்களால் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த அத்துமீறிய விவசாயிகள் வருவதை ஆறாம் மாதம் அளவில் அந்த நேரம் இருந்த ரொசான் ரணசங்கவிடம் தெரிவித்து இருந்தோம். அவர் கவனம் செலுத்தவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடம் இடம் பெற்ற கூட்டம் கூட்டத்தில் ஜனாதிபதி கூறினார், அரசியல்வாதிகள் செல்லக்கூடாது பிக்குமார் செல்லக்கூடாது பணியாளர்களும் செல்லக்கூடாது அதாவது ஓட்டுமொத்தத்தில் அந்த பிரதேசத்துக்குள்ளே மூன்றாம் நபர்கள் செல்ல முடியாது. அதிகாரிகள் மாத்திரம் செல்ல முடியும், பண்ணையாளர்கள் செல்லலாம் விவசாயிகளும் செல்லலாம் அதே போல இதைவிட அதிகமாக வரக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் எங்களுடைய மாவட்டத்தில் இருக்கும் ஒரு முட்டாள் அந்த இடத்திலேயே கூறினார் பொலிஸ் காவலரனை போடுங்கள் என்று.
அவர் நினைத்தார் இந்த பொலிஸ் காவலரனை போட்டு அவர்களை கட்டுப்படுத்தலாம் என்று இப்போது அந்த
பிரதேசத்துக்குள்ளே சாதாரண மக்களும் செல்ல முடியாது, எமது பண்ணையாளர்களும் நிம்மதியாக செல்ல முடியாது, அரசியல்வாதிகளும் செல்ல முடியாது ஏன் என்றால் இதற்கு காரணம் எமது மாவட்டத்தில் இருக்கும் முட்டாள் அபிவிருத்தி குழு தலைவர் தான்.
நிச்சயமாக என்னை பொருத்தளவில் ஜனாதிபதியினுடைய செயல்பாடுகளை பொலிஸின்அடிமட்டத்தில் இருக்கும் உறுப்பினர்களை குறை சொல்லவில்லை பொலிஸின் மேல் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர், ஏ.எஸ்.பி மட்டமல்ல அதற்கு மேல் இருக்கும் உயர் அதிகாரிகள் ஜனாதிபதியுடன் அவர்களுக்கு தனிப்பட்ட குரோதம் இருப்பதாக தெரிகிறது.
ஏனென்றால் சில இடமாற்றங்கள் புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் விடையங்கள் தொடர்பிலே அவர்களுக்கு இருக்கும் முரண்பாடுகளை வைத்து இன்று மக்களை வதைக்கின்றார்கள் மக்களை வதைப்பதன் ஊடாக எங்களை வைத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிரான சில செயற்பாடுகள் வரும் என்று தெரியும் இதனால் அரசுக்கு ஒரு அவப்பெயர் வரும்.இதன் அடிப்படையில் தெரியவருவது என்னெவென்றால் பொலிஸார் மக்களின் பல முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொலிஸார் வேணும் என்றே இந்த பிரச்சினைகளை வளர விடுகிறார்கள் என்கின்ற சந்தேகம் இருக்கின்றது என தெரிவித்தார்.