கிழக்கில் வாழும் சிங்கள மற்றும் தமிழ் மக்களின் ஒற்றுமையை அழிக்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவோரை கேட்டுக்கொள்வதாக மட்டக்களப்பு அம்பிட்டியே சுமனரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு கெவிலியாமடு விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு கெவிலியாமடு கிராமத்தை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வருகைதந்ததாகவும் அதற்கு தாமும் மக்களும் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
திவ்லபொத்தானை கிராமத்தில் சிங்கள மக்கள் பல வருடங்களாக விவசாயம் செய்துவருகின்றனர் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் இந்த விவசாய செய்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த விவசாய நிலங்களை தமிழ் மக்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கு வழங்க வேண்டும் என அவர்கள் கோருவதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல ஆண்டுகளாக வாழ்ந்த நிலத்தை கால்நடைகளுக்காக வழங்கினால் சிங்கள மக்கள் எவ்வாறு வாழ்வார்கள் எனவும் அதற்கு எதிராகவே தாம் குரல்கொடுத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகைதந்து இனவாதத்தை உருவாக்குகின்றார் எனவும் மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் யுத்த காலத்திலும் தம்மை பாதுகாத்தார்கள் எனவும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கூறியுள்ளார்.
அன்று முதல் தமிழ் மக்களுடன் தாம் இருந்ததாகவும் அவர்களின் துன்பத்திலும் மகிழ்ச்சியிலும் உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் வெறுப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கூறியுள்ளார்.
இது மிகவும் தவறானது எனவும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது பங்காளிகள் எனவும் கூறியுள்ள அவர், இந்த ஒற்றுமையை சீர்குலைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கே தாம் எதிர்ப்பு வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ள அம்பிட்டியே சுமன ரத்ன தேரர், தேசிய ஒருமைப்பாடு சிதைந்துவருவதால் தற்போதைய ஆட்சியாளர்கள் சட்டத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோருவதாகவும் கூறியுள்ளார்.
பிள்ளையான், வியாழேந்திரன் மற்றும் ஏனைய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற போதிலும் அவர்கள் இனவாதம் பேசவில்லை எனவும் சுமன ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு நெருக்கடியில் இருக்கும் தருணத்தில் இதுபோன்ற செயற்பாடுகளை அனுமதிக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.