சர்வதேச நாடுகளில் வாழ்கின்ற இலங்கை புலம்பெயர் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கும் அவர்களது பங்களிப்பை இலங்கையின் வளர்ச்சிக்கு பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன்
செயற்பட்டு வருகின்றது என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
கடந்த வாரம் முழுவதும் இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டு உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு
வார்த்தை நடத்தியிருந்தனர்.
இந்தநிலையிலேயே பிரதமர் தினேஷ் குணவர்தன புலம் பெயர் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்- உலகத் தமிழர் பேரவை மற் றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மகாநாயக்கத் தேரர்கள், ஜனாதிபதி, எதிர்க் கட்சித் தலைவர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சபா நாயகர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருந்ததுடன் இலங்கையை மீள் கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்ட இமயமலை பிரகடனம் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் நான் இந்தத்தரப்பினரை சந்திக்கவில்லை. எனினும் ஒரு விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். அரசாங்கம் புலம்பெயர் மக்களின் பங்களிப்பை பெறுவதற்கு தயாராக இருப்பதுடன் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
புலம் பெயர் மக்களின் பிரதிநிதிகளை இதற்கு முன்னரும் பல தடவைகள் சந்தித்திருக்கிறேன். அவர்கள் இலங்கையில் வந்து முதலீடு செய்யவும் அபிவிருத்தியில் பங்கெடுக்கவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது.
அதற்காகவே வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்காக ஒரு அலுவலகமும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. புலம்பெயர் மக்கள் இலங்கை வந்து முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தால் அதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது-என்றார்.