மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை போராட்டம் என்பது வெறுமனே கால்நடை மேய்ப்பாளர்களின் போராட்டம் அல்ல. அது மட்டக்களப்பில் தமிழர்களின் இருப்புக்கான போராட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைக்காணியை மீட்டுத்தருமாறு கோரி போராட்டம் நடாத்திவரும் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் நூறாவது நாளான இன்று23 மாபெரும் போராட்டமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு சித்தாண்டியில் உள்ள வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக, தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை அபகரிப்புக்கு எதிராக கால்நடை பண்ணையாளர்கள் தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் நூறாவது நாளான இன்று சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு முன்பாக தேங்காய் உடைத்து வழிபாடுகளை முன்னெடுத்த கால்நடை பண்ணையாளர்கள் ஊர்வலமாக வந்து தாம் போராட்டம் முன்னெடுத்துவரும் பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அப்பகுதியில் பெருமளவான பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் அமைதியான முறையில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்,பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களான தவத்திரு வேலன் சுவாமிகள்,அருட்தந்தை ஜெகதாஸ்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அவர்கள் மட்டுமல்லாது கால்நடை பண்ணையாளர்களின் அமைப்புகள்,விவசாய அமைப்புகள்,சிவில் அமைப்புகள்,பொது அமைப்புகள் என பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதன்போது கலந்துகொண்டதுடன் கால்நடை பண்ணையாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
காவியுடை கொண்டு எங்களை நசுக்க வேண்டாம், ஆக்கிரமிப்பு சிறிலங்காவின் தேசிய கொள்கையா?,நாங்கள் வாய் பேசாத ஜீவன்கள் எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கள்,அம்பாறை,திருகோணமலை போன்று மட்டக்களப்பில் வேண்டாம்,மயிலத்தமடு,மாதவனை எங்கள் சொத்து போன்று வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
வடகிழக்கு தமிழர் தாயகம்,வாழவிடு வாழவிடு எங்களை வாழவிடு,மயிலத்தமடு எங்களது நிலம்,சுடாதே சுடாதே கால்நடைகளை சுடாதே போன்ற பல்வேறு கோசங்கள் போராட்டத்தில் எழுப்பப்பட்டன.
இதன்போது போராட்டம் நடைபெற்று நூறாவது நாளை குறிக்கும் வகையில் 100 என்ற தீப்பந்தம் செய்யப்பட்டு அதில் எரித்து தமது போராட்டத்தினை கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்தனர்.
அத்துமீறிய குடியேற்றம் தொடர்பில் தொடர்ச்சியான வலியுறுத்தில்களை முன்னெடுத்துவரும் நிலையில் நூறு நாட்களை தாண்டியும் அதற்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்பதுடன் அதிகாரிகள் மட்டத்தில் இதுவரையில் தமது போராட்டம் தொடர்பில் எந்த அதிகாரிகளும் வந்து தமக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வரவில்லையெனவும் இதில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றியதற்காக பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்யும் பொலிஸார் தமது மாடுகளை சுடுபவர்களை இதுவரையில் கைதுசெய்யமால் இருப்பது என்பது தமிழர்களுக்கு பொலிஸ் அதிகாரத்தின் மீது நம்பிக்கையிழக்க செய்துள்ளதாகவும் இதன்பேது தெரிவிக்கப்பட்டது.
இதன்போது மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் 100வது நாள் போராட்டத்தினை குறிக்கும் வகையில் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுடன் அந்த பிரகடனத்தினை அங்கு காவல் கடமைக்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸாருக்கும் கால்நடை பண்ணையாளர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.