கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் வைத்து 17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் இலங்கை கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், விமான நிலைய வௌியேறும் முனையத்தில் இருந்து வெளியேறும் போது கைது செய்யப்பட்டதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது குறித்த சந்தேகநபரின் உள்ளாடையில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 66 தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தங்கத்தின் எடை 07 கிலோ 700 கிராம் எனவும் இதன் பெறுமதி பதினேழு கோடியே அறுபது இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இலங்கையின் கேட்டரிங் நிறுவனத்தில் 15 வருடங்களுக்கு மேலாக பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.
குறித்த தங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு பயணிகள் முனையத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் குறிப்பிட்ட ஒருவரினால் சந்தேக நபருக்கு வழங்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.