71 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு புதிய கூட்டணியை அமைத்திருக்கின்றோம். இக்கூட்டணி ஒருபோதும் பொதுஜன பெரமுனவுடன் இணையாது. மாறாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பித்து, அக்கூட்டணிக்கான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாண்டு நிச்சயம் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டிய ஆண்டாகும் என்பதோடு, அது ஜனாதிபதித் தேர்தலாகவே இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.
பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் என்பது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாகவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பே முதலில் வெளியாகும் என்பது எனது நிலைப்பாடாகும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகளில் போட்டியிட்டு, ஆனால் தற்போது அவற்றை பிரதிநிதித்துவப்படுத்தாத 71 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இன்றிலிருந்து எமது புதிய கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். என்றார்.
மேலும், பணத்தை மரத்திலிருந்து பறிக்க முடியாது. இன்றிலிருந்து பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.
மக்கள் தூற்றுவார்கள் என்பதை ஜனாதிபதியும், அரசாங்கமும் நன்கு அறிவர்.
மக்கள் எவ்வளவு விமர்சித்தாலும் உண்மைகளையும், யதார்த்தத்தையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
கோட்டாபாய ராஜபக்ச வந்து வரிகளை குறைத்த பின்னர் என்ன நடந்தது?
அது அனைவருக்கும் நன்றாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியவில்லை.
தற்போது கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் ஜே.வி.பிக்கும் நாம் சவாலான கூட்டணியாக இருப்போம்.
மக்களுக்கு உண்மைகளை எடுத்துரைத்து 22 மாவட்டங்களிலும் வெற்றி பெறக் கூடிய பலம் மிக்க கூட்டணியாக நாம் வலுப்பெறுவோம் என்றார்.