சில வாரங்களுக்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் பல புதிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பாக 3 வாகன சட்டங்கள் அமுல் செய்யப்பட்டன.
இந்த வாகன சட்டங்களின் அடிப்படையில் குற்ற செயல்களுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் படி சாலை விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட விபத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 7 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மூன்று சட்டங்களும் இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த இந்திய குற்றவியல் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களுக்கு பதிலாக தற்போது அவற்றில் சில திருத்தங்களுடன் 3 புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன் நடைமுறையில் இருந்த சட்டத்தின் படி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் குற்றத்திற்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை என்றுதான் இருந்தது. ஆனால் இந்த புதிய சட்டத்தின் படி தற்போது அந்த தண்டனை 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சட்டம் அமுல் படுத்தப்பட்டதால், லாரி மற்றும் பஸ் ஓட்டுநர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் லாரி ஓட்டுனர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.