யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலைப் பகுதியில் இயங்கி வரும் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்ட 80 வயதான போதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று (11.04.2023) கொழும்பில் வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் சட்டவிரோதமான முறையில் நடத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லத்தில் இருந்து 16 சிறுவர்கள் அண்மையில் மீட்கப்பட்டுள்ளனர்.குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்த அருட்சகோதரி ஒருவர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவினால் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஆலயத்தின் தலைமைப்போதகர் தம்மிடம் தகாத முறையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து 80 வயதான தலைமைப் போதகரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்த போதும் அவர் தலைமறைவாகியிருந்தார்.
இந்த நிலையில் கொழும்பில் நேற்றுக் கைது செய்யப்பட்ட போதகரை உடனடியாகவே அங்கு நீதிமன்றில் முற்படுத்தியபோது அவரது கடவுச்சீட்டை முடக்கி நீதிமன்று பிணையில் விடுவித்தது. யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றில் உடனடியாக சரணடையுமாறும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.