சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது சிறுமி ஒருவர“ இதுவரை 50 முறை யாத்திரை சென்று சாதனை படைத்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர விளக்குப் பூசைகள் மிகவும் புகழ்பெற்றவை.
இந்நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இவ்வாண்டு வழக்கத்தைவிட அதிகமான குழந்தைகளைப் பக்தர்கள் அழைத்துச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கேரளாவின் கொல்லம் மாவட்டம், எழுகோன் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் மணி என்பவரும் தன் மகள் அதிதியை இருமுடி கட்டி சபரிமலைக்கு 50வது முறையாக அழைத்துச் சென்றிருந்தார்.
எழுகோனில் உள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பில் படித்து வருகிறார் அதிதி. அதிதி பிறந்து ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தது முதல் இப்போதைய 10 வயது வரை ஒவ்வோர் ஆண்டும் மாதாந்திர பூசை, மண்டல பூசை, மகரவிளக்கு பூசைக் காலங்களில் தவறாமல் சபரிமலைக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது 50ஆவது முறை சென்றுள்ளதன் மூலம் சிறுவயதில் சபரிமலைக்கு அதிகத் தடவைகள் பயணம் மேற்கொண்டுள்ளவராக பிரபல்யமாகியுள்ளார்.