மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரையில் 5ஆயிரத்து 461 குடும்பங்களை சேர்ந்த 17ஆயிரத்து 531பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8.30மணியளவில் முடிவடைந்த 24 மணி நேரத்தில் வாகனேரி பகுதியில் 174 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் அடை மழைகாரணமாக பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் இடம்பெயர்வும் அதிகரித்துவருகின்றது.
வாகரை கல்லரிப்பு பிரதேச மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வாகனேரி குளத்தில் 19.2 அடிக்கு நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், வான்கதவு ஆறு அடி வரை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது.
மயிலம்பாவெளி பிரதேசத்தில் 130மில்லி மீற்றர் மழையும், தும்பங்கேணியில் 112.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. உருகாமம் பகுதியில் 103.9 மில்லி மீற்றர் மழை பதிவாகிய நிலையில், உருகாமம் குளத்தில் 15.8 அடிக்கு நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், இரண்டரை அடிக்கு நீர் வான்பாய்கின்றது. உன்னிச்சை பிரதேசத்தில் 102 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதுடன், உன்னிச்சை குளத்தில் 33 அடிக்கு நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து மழைபெய்துவருவதன் காரணமாக பிரதான குளங்கள்,தாழ்நிலங்கள்,நீரேந்து பகுதிகளுக்கு அருகில் உள்ள மக்களை அவதானமாகயிருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.