சுகாதார தொழிற்சங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளின் அன்றாடப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இதன் காரணமாக பதுளை பொது வைத்தியசாலையின் கடமைகளை ஈடுசெய்ய இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வைத்தியர்கள், தாதியர்களின் சேவைகள் மற்றும் மருந்து விநியோகம் என்பன வழமை போன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையின் கனிஷ்ட நிலை ஊழியர்கள் இரவுப் பணியை முடித்துக் கொண்டு வெளியேறியதாகவும், எஞ்சிய ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும், அவசர சிகிச்சைச் சேவைகள் தொடரும் எனவும், அனைத்து வைத்தியர்களும் 24 மணிநேர சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
உயிரைக் காப்பாற்றுவதே நோக்கம் எனவும் தொழிற்சங்க நடவடிக்கையை சீர்குலைக்கும் நோக்கில் அல்ல என தெரிவித்த வைத்தியசாலைப் பணிப்பாளர், ஆபத்தான நோயாளர்களை வீட்டில் வைத்திருக்காமல் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.